காமமும், காசு ஆசையும்!

1 week ago 3

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 93 (பகவத்கீதை உரை)

சக்னோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்சரீரவிமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த
ஸ ஸுகீ நர (5:23)

‘தற்போதைய வாழ்வில், தன் உயிர் உடலைத் துறப்பதற்கு முன்னாலேயே காமம், குரோதம் இரண்டின் வேகத்தையும் சமாளிக்கத் தெரிந்தவனாக இருப்பவனே யோகி. அவன் அந்த இரண்டையும் தவிர்க்கும் உபாயம் தெரிந்தவனாகவும் இருப்பான்.’மனித உடலில் உயிர் தங்கியிருக்கும் முழு ஆயுள் காலத்திலும் காமமும், குரோதமும் தலையெடுத்தவாறே இருக்கும். அந்த உணர்வுக்கு எதிராகப் போராடுவதும், அவற்றை வெற்றி கொள்வதும்தான் மனித இயக்கத்தின் மாபெரும் சாதனை.

நமக்குள்ளேயே, நாமே வளர்த்துவரும் இந்த எதிரிகளை நம்மால் சமாளிக்க முடிந்தால், அல்லது அழிக்கவே முடிந்தால், நிச்சயம் வெளியே நமக்கு எதிரிகள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ராமாயண கூனியாகவும், மகாபாரத சகுனியாகவும் கொஞ்சம், கொஞ்சமாக விஸ்வரூபம் எடுக்கும் அந்தத் தீய உணர்வுகள், நம்மை அலைக்கழித்து, நம் நிலையிலிருந்து கீழே படு பாதாளத்துக்குத் தள்ளிவிட்டு, நம்மையே பார்த்துக் கை கொட்டிச் சிரிக்கும்! அதாவது நம்மாலேயே நாம் அவமானப்படுகிறோம், நஷ்டப்படு கிறோம், தனித்தும் விடப்படுகிறோம்.

அம்பாரமாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் செல்வத்தை வெறுமே பார்த்துக் கொண்டிருப்பதிலும், மேலும், மேலும் அதை சேகரித்துக் கொண்டே போவதிலும் என்ன சுகம் ஏற்பட்டு விடுகிறது? ஒன்று, பத்து, நூறு என்ற எண்ணிக்கையிலான அன்பர்களின் பாராட்டுகளில் என்ன சந்தோஷம் உண்டாகிறது? எல்லாமே தற்காலிகம்தானே? நாமே நிரந்தரமில்லாதபோது இதெல்லாம் மட்டும் சாஸ்வதமா? சேர்த்து வைத்ததெல்லாம் நமக்குப் பின் நம் சந்ததிக்கு என்று போடும் கணக்கின் விடையை நம்மால் காணமுடியுமா? முடியாது. ஏன்? நம் சந்ததியின் அனுபவத்தை நம்முடைய அடுத்த பிறவியில் நம்மால் காணமுடியாததால்தான். அதேசமயம், எந்த வழிகளில் அவை சேர்த்து வைக்கப்பட்டவை என்ற உண்மை மட்டும், இப்போதைய பாவமூட்டையின் கனத்தை அதிகரித்து, அப்படியே அடுத்தப் பிறவிக்குக் கூடவே போகிறது!

அர்ஜுனன் என்ன செய்யப் போகிறான்? நீடித்துக்கொண்டே போகும் கிருஷ்ணனின் உபதேசத்தால் அவன் வெறுத்துப் போய், ‘நிறுத்து கிருஷ்ணா’ என்று தடுக்கவும் இல்லை, குறுக்குக் கேள்வியும் கேட்கவில்லை. அவனும் சுய தெளிவிற்காகத்தான் காத்திருக்கிறான்! அவனுடைய மனசு இன்னும் முழுமையாக அலம்பப்படவில்லை.

அதற்குக் காரணம், அவனுடைய அடிமனதில் ஊறியிருக்கும் சுகத்தேடல்தான். துரதிருஷ்டவசமாக இந்தத் தேடலின் உற்ற தோழனாக கோபம் இணைந்து கொள்கிறது. சுகம் அடைவதற்காகத் தனக்கு ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால், அது கோபத்தைக் கிளறிவிடுகிறது. அந்தக் கோபம் எல்லா புலன்களிலும் போய் உட்கார்ந்து கொண்டு அவற்றின் மூலம் சந்தேகம் மற்றும் வன்மம் என்ற அடுத்தடுத்த கொடிய பண்புகளை உருவாக்கி விடுகிறது. அதாவது எதிர்பார்ப்பது கிடைக்காதவரையில் கோபமும் அடங்குவதில்லை. அப்படியே அது கிடைத்துவிட்டாலும், அடுத்த ஏக்கம் எப்போது முளைக்கும் என்று வெகு குரூரமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது, கோபம்.

கோபத்தால் விளைந்த பல இழப்புகளை, எத்தனையோ அழிவுகளை அடுத்தடுத்து அனுபவித்து கொண்டுதான் வருகிறோம் என்றாலும், அதை முற்றிலுமாகத் தவிர்க்கவே முடியவில்லையே, ஏன்? அதனுடைய மூலமான காமம்தான். எதையேனும் இச்சிப்பதின் உறுதுணையே கோபம்;

ஆசைப்படுவதன் விளைவு!

‘அளவோடு ஆசைப்படு’ என்று காமத்திலிருந்து மீள முடியாதவனுக்கு யோசனை சொல்லலாம்; அதுவும் அவ்வாறு சொல்பவரின் தப்பித்துக்கொள்ளும் உத்திதான். ஏனென்றால் அளவு என்பது என்ன? எத்தனை அல்லது எவ்வளவு? அது தானியமா, படியால் அளந்து காட்ட? ‘ஆசையே அலைபோலே..’ என்றபடி ஓயாது வீசிக் கொண்டிருக்கும் தன்மை கொண்ட
தல்லவா காமம், அதாவது ஆசை?

இந்த மனித பலவீனத்தை, வியாபாரிகள்தான் எப்படித் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்!

கார் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளருக்கும், விற்பனைப் பணியாளருக்கும் ஏதோ தகராறு. சந்தடி கேட்டு விரைந்து வந்தார் அதிகாரி. ‘‘என்ன ப்ராப்ளம்? வாடிக்கையாளர் திருப்திதான் நமக்கு முக்கியம். அவருடன் ஏன் வீணாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாய்?” என்று அதிகாரி, பணியாளரிடம் கோபமாகவே கேட்டார். வாடிக்கையாளர் மனம் குளிர்ந்தால்தானே, ஒரு காரை விற்க முடியும்?

பணியாளரோ மிகவும் சோகமாக பதில் சொன்னார்: ‘‘சார், இவர் காரை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறார்; ஆனால் நம் விளம்பரத்தில் வரும் மாடல் பெண்ணையும் உடன் அனுப்ப வேண்டுமாம்!”இன்னொரு வாடிக்கையாளர் அந்தப் பெண்ணைக் கேட்கவில்லையென்றாலும், மறைமுகமாக, அந்தப் பெண் தன்னுடனேயே வருவதாகக் கற்பனை செய்து
கொள்ளக் கூடும்!இப்படி மனித வக்கிரத்தை வியாபாரமாக்கிக் கொள்ளும் வழக்கம் இப்போதெல்லாம் நிறையவே பெருகிவிட்டது. பெண்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத, அவர்கள் உபயோகப்படுத்தவே முடியாத விற்பனைப் பொருட்களுக்கெல்லாம் அவர்களை முன்னிறுத்தி விளம்பரங்கள்! என்ன விபரீதம் இது!

பாற்கடல் கடைந்தபோது கிடைத்த அமுதத்தை காம உணர்வுகொண்ட அரக்கர்களுக்குக் கிடைக்காமல் செய்ய திருமாலே மோகினி அவதாரம் எடுக்க வேண்டியிருந்ததே! அதே மோகினியோடு தானும் கட்டழகனாகச் சென்று தாருகாவன முனிவர்கள் மற்றும் முனிப்பத்தினிகளின் கர்வத்தை சிவபெருமானும் அழித்தாரே!இதற்கு முக்கிய காரணம், ‘காமமே மனிதனுக்கு எல்லாமுமாக அமைந்து விடுகிறது,’ என்கிறார் ஃப்ராய்ட். நிறைய செல்வம் சேர்த்திருக்கும் ஒருவனால் விலை கொடுத்து சுலபமாகக் காமத்தைத் தணித்துக் கொள்ள முடிகிறது. புகழ் சேர்த்திருக்கும் ஒருவருக்கும் இது சாத்தியமே.

குறிப்பாக கவனித்தோமானால், எதனிடமிருந்தாவது சுகத்தை அடைவதே நம் நோக்கமாக இருப்பது புரியும். சுக எதிர்பார்ப்பில் குறை ஏற்பட்டாலோ அல்லது ஏமாற்றம் உண்டானாலோ, காமத்தின் இடத்தைக் கோபம் பிடித்துக் கொண்டு விடுகிறது. கோபம் அதிகரிக்க, அதிகரிக்க மனசுக்குள் ஒளி மங்கிப்போய், இருட்டு சேர ஆரம்பித்துவிடுகிறது. இதனால் உடலுக்குள் தேவையான அளவைவிட அமிலங்கள் அதிகம் சுரந்து அதனால் உடல் நலம் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இப்படி பாதிக்கப்பட்டதாலும் இயலாமையால் மேலும் கோபம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது; அமைதியும் கிட்ட மாட்டேனென்கிறது.

அதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார். ‘‘காமம், கோபம் இரண்டுமே மனிதனால் தவிர்க்கவே முடியாதவை. ஆனால் அவ்விரண்டும் வெளிப்படுவதன் அளவுகோலை அவனால் அனுமானிக்க முடியும். கிடைக்காதோ, கிடைக்காமலேயே போய்விடுமோ என்ற ஏக்கம் அல்லது ‘வேண்டவே வேண்டாம்’ என்ற துறவு இரண்டுமே அந்த அளவு கோலைச் சரியாக அமைக்காது. இரண்டு நிலைகளாலும் பாதிக்கப்படாமல் இருக்கக் கூடியவனால் மோகத்தை வெல்ல முடியும்!”‘‘காமமும், காசு ஆசையும் உலகம் முழுவதையும் பாபத்தில் ஆழ்த்திவிட்டன. பெண்களை லோகமாதாவின் தோற்றங்களென்று கருதுவாயானால் உனக்கு அவர்களால் துன்பம் உண்டாகாது. ஆசை நசிக்காதிருக்கும் வரையில் ஈசனைக் காண முடியாது,” என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்த நாடுகளில் காம உணர்வால் மக்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு கட்டாயம் மாற்று வேண்டும்; அதனால் அவர்கள், கோணல் மனதை நேர் செய்துகொள்ள இந்திய யோகா, தியானம் இவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள் – வயது வித்தியாசமின்றி!

யோந்த: ஸுகோந்தரா ராமஸ்ததாந்தர் ஜ்யோதிரேவ ய:
ஸ யோகீ ப்ரஹ்மநிர்வாணம் ப்ரஹ்மபூதோதிகச்சதி (5:24)

‘‘உண்மையான சுகம் என்பது எது? ஐம்புலன்களால் பெறுவது வெறும் அனுபவம் மட்டுமே. ஆனால், ஆன்மாவில் காண்பதுதான் உண்மையான சுகம். அதுதான் ஞான வெளிச்சம். அதாவது எதையுமே நாடிச் செல்ல வேண்டாத வகையில் எல்லாவற்றையும் தன்னிடமே கொண்டிருப்பதான ஆன்ம உணர்வே உண்மையான சுகம். இப்படி சுகானுபவத்தை உணரும் யோகி, தானே பிரம்ம சொரூபமாகி விடுகிறான். அதனாலே அடுத்து பிறப்பது என்ற பிணியிலிருந்தும் அவன் விடுதலை பெறுகிறான்.”

ருசியான உணவை உண்கிறோம்; இனிமையான இசையைக் கேட்கிறோம்; மலர்களின் மணத்தை நுகர்கிறோம்; அழகான காட்சியைக் காண்கிறோம்; தென்றலை ஸ்பரிசிக்கிறோம் – இதெல்லாம் வெறும் அனுபவங்கள்தான்; சுகம் அல்ல. அதாவது கடந்து செல்பவை. ஒன்றை அடுத்து இன்னொன்று என்று நம் வாழ்க்கைப் பயணத்தில் கூடவே வருபவை. ரயில் பயணத்தில் ஜன்னலிலிருந்து பார்க்கும் காட்சிகள் ஒவ்வொன்றாக வேகமாகப் பின்னோக்கிச் சென்று மறைவதைப் போல. நிலைப்பதில்லை; நிரந்தரமில்லை.

உண்மைக் காட்சிகள்தான், ஆனால் மாயமாய் மறைந்து விடுபவை. நாமும் அவ்வாறு கடந்தவற்றைத் தேடிக் கொண்டு போவதில்லை; காரணம், புது அனுபவங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. இவற்றில் லயிக்கிறோம்; பழையதை மறக்கிறோம். அதாவது சுகம் என்று நாம் நினைத்துக் கொள்வதில் கூடுதல், குறைச்சல் என்ற வேறுபாடு காட்டும் அனுபவங்கள் அவை. ஒரே மாதிரியானது அல்ல.

ஆனால் ஆன்மா அடையும் சுகமே நிரந்தரம். இது எப்படி சாத்தியம்? புற அனுபவங்கள் எதையும் ஆன்மா ஏற்பதில்லை என்ற பக்குவம் ஏற்படும்போது சாத்தியம். வெளிசுகங்கள் நமக்குள் இறுக்கத்தை உண்டாக்குகின்றன என்பதே நம் அனுபவமாக இருக்கிறது. அவற்றுக்கு எல்லை காண முடியாததே இதற்குக் காரணம். ஒருவன் ஒவ்வொன்றாகப் பல புத்தகங்களைச் சேகரிக்கிறான் – சில இவன் விலை கொடுத்து வாங்குபவை, சில அன்பளிப்பாகக் கிடைப்பவை.

ஆனால் அந்தப் புத்தகம் எதையும் அவன் படிப்பதில்லை. அதற்கு அவன் சொல்லும் காரணம்: ‘எல்லாவற்றையும் இப்போது சேர்த்து வைத்துக் கொள்வேன்; பணி ஓய்வுக்குப் பிறகு, ஒவ்வொன்றாகப் படிப்பேன்’, ஆனால் துரதிருஷ்டவசமாக பணி ஓய்வு வயதுக்குப் பிறகு அவனுக்குக் கண் பார்வை மங்குகிறது, காது தெளிவாகக் கேட்பதில்லை, பேசுவதே குளறலாகத்தான் இருக்கிறது. உடம்பில் நடுக்கம் காரணமாக, கைகள் புத்தகத்தைத் தூக்கிப் பிடிக்கத் தடுமாறுகின்றன. அந்தக் காலத்தில் புது பொறுப்புகளும் சேர்ந்து கொள்கின்றன – பிள்ளைகள் திருமணம், பேரக் குழந்தைகள், உள்ளுக்குள்ளே தோன்றும் உபாதைகள்…. பல வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை ரொம்பவும் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடிவதில்லை!

இதுவே செல்வத்தை சேகரிப்பவனுக்கும் பொருந்தும். இவனுக்குச் செலவழிக்க மனசு வராது, ‘இன்னும், இன்னும் சேர்க்க வேண்டும்…’ இருக்கும்போதும் அனுபவிப்பதில்லை; மறைந்தபிறகும் அது என்னாகும் என்று அறியப் போவதில்லை! என்ன வாழ்க்கை இது! அதனால்தான், ‘உள்ளே சுகத்தை உணர்ந்தவன், உள்ளே அமைதியை உணர்ந்தவன், உள்ளே ஞானத்தை உணர்ந்தவன் – அவன்தான் ஞான யோகி’ என்கிறார் கிருஷ்ணன்.

நோய்க்கான மருந்தை ஒரு மருத்துவர் தயாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவர் முதலில் அந்த நோயைத் தான் அனுபவித்து, பிறகு, தான் கண்டுபிடிக்கும் மருந்தைத் தானே உட்கொண்டு, நோய் குணமாகிறதா என்று பார்த்துக் கொள்வார். உதாரணமாக, சாமுவேல் ஹனிமேன் என்ற ஜெர்மானிய ஹோமியோபதி மருத்துவரைச் சொல்லலாம்.

இவர் தான் கண்டுபிடித்த எந்த மருந்தையும் எலிக்கோ, தவளைக்கோ செலுத்தி அதன் பின்விளைவுகளை ஆராய்ந்ததில்லை; தானே உபாதையை வரவழைத்துக் கொண்டு தானே மருந்தை எடுத்துக் கொண்டு விளைவுகளை விரிவாக பல புத்தகங்களில் எழுதி வைத்தார். மனிதருக்கான மருந்து, அதற்கு மனித நோய் அறிகுறிகள்தான் முக்கியம். எலிக்கும், தவளைக்கும் ஏற்படும் அறிகுறிகள் மனிதனுக்கு எப்படிப் பொருந்தும்! இன்று, இவருடைய குறிப்புகளையே ஆதாரமாக வைத்து உலகெங்கும் ஹோமியோபதி மருத்துவம் பயன்படுகிறது.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post காமமும், காசு ஆசையும்! appeared first on Dinakaran.

Read Entire Article