அரசு பஸ் போக்குவரத்துக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது- சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்

5 hours ago 1

நெல்லை,

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு நவீன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் தமிழக அரசின் போக்குவரத்து துறையின் மூலம் இயங்கக்கூடிய அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடியல் பயணத்தின் மூலம் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு ரூ.3,200 கோடி நிதி முன்கூட்டியே வழங்கி உள்ளது. ஒரு மகளிருக்கு ரூ.16 கட்டணத்தை அரசு முன்கூட்டியே கட்டி வருகிறது. இது தவிர போக்குவரத்து துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பயண அட்டை, முதியோருக்கான இலவச பஸ் பயண அட்டை போன்றவைக்கும் அரசு பணம் செலுத்தி வருகிறது.

டீசலுக்கான மானியம் 30 சதவீதம் அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கான திட்டங்கள், போக்குவரத்து துறையில் பல்வேறு சலுகைகள் என அரசு செய்து வரும் நிலையில் தமிழக அரசு பணம் செலுத்தவில்லை என சுங்கச்சாவடிகளில் பஸ்சை அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.16 லட்சம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. எனவே பொது மக்களுக்காக சேவை செய்யும் அரசு பஸ்களுக்கான கடனை வசூலிக்க கூடாது. சுங்கச்சாவடி கட்டண விவகாரம் தொடர்பான பிரச்சினையை நீதிமன்றம் சென்று முதல்-அமைச்சர் சுமூக தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுப்பார்"இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article