துரைப்பாக்கம்: காப்பகத்தில் சிறுவர்கள், மன நலம் பாதித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 ஊழியர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை காரப்பாக்கம், ஈஸ்வரன் தெருவில் ஒரு காப்பகம் உள்ளது. இங்கு ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என 120 பேர் உள்ளனர். இதில், 30 பேர் மனநலம் பாதித்தவர்கள். இவர்களை பராமரித்து கண்காணிக்க, 33 ஊழியர்கள் உள்ளனர். காப்பகத்தில் உள்ள சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட சிலரை மூன்று ஊழியர்கள் கடுமையாக தாக்கி, கொடுமைப்படுத்தி உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அசோகன் (24), பிரகாஷ் (25), சுபாஷ் (24) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய இருந்த நிலையில், மூன்று பேரும் காப்பகத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டனர். போலீசார், தனிப்படை அமைத்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், காப்பக நிர்வாகிகள், ஊழியர்கள், தங்கி இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காப்பகத்தில் சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் மீது தாக்குதல்: 3 ஊழியர்கள் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.