சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பாரம்பரியமாக, காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்பு மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் மட்டுமே நடத்தப்படும். இருப்பினும், மெரினா கடற்கரை சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், 2022ல் தமிழக அரசு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திற்குள் காந்தி சிலையை நிறுவியது.
அன்று முதல் காந்தி பிறந்தநாள் மற்றும் தியாகிகள் தின அனுசரிப்பு இரண்டும் எழும்பூர் அருங்காட்சியக காந்தி சிலை முன்புதான் நடக்கின்றன. குறிப்பாக, ஆளுநர் ரவி கடந்த ஆண்டுகளில் எழும்பூரில் நடந்த இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார். எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். பாந்தியன் சாலையை ஒட்டியிருக்கும் அந்த அருங்காட்சிகத்தின் பிரதான நுழைவு வாயில் முன் உள்ள காந்தி சிலை முன்புதான் அஞ்சலி நிகழ்வு நடந்தது.
ஆளுநர் குறிப்பிடுவது போல அருங்காட்சியக ஒரு மூலையில் நடக்கவில்லை. பின்னணியில் பாந்தியன் சாலையும் மேம்பாலமும் புகைப்படத்தில் தெரியும். ஆனால், ஆளுநர் கண்களுக்கு வெறும் அவதூறு தான் தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைவிட ஆளுநர் முக்கியமானவர் அல்ல. மன்னராக, ஜமீன்தாராக நினைத்து அதிகாரம் செய்யும் மனநோயில் இருந்து ஆளுநர் விடுபட வேண்டும். இந்த பிரச்னையை அரசியலாக்குவதை தவிர்த்து, தமிழக மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும்.
The post காந்தி நினைவு நாளை அரசியலாக்குவதை தவிர்த்து மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள் appeared first on Dinakaran.