நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
Love Definition
அகமெனும் அட்சயப் பாத்திரம்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சமூகத்தில் நிலவிய கடுமையான சாதி, மத கட்டுப்பாடுகளை மீறி காதல் திருமணங்களை செய்து வைத்தார் ரோமானியப் புனித பாதிரியார் வேலன்டைன். அவரின் நினைவு நாளான பிப்ரவரி 14 உலகெங்கும் காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்று நாம் அறிவோம்.
இது அவசியமா இல்லையா என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால், காதலைப் போன்ற சுவாரஸ்யமான தலைப்பு இன்றுவரை வேறில்லை என்பதை யாருமே மறுக்க முடியாது.பொது விழாக்களிலும், பட்டிமன்றங்களிலும், இணைய உலகிலும் ஆண் – பெண் உறவின் ஈர்ப்பும், சிக்கலுமே எல்லா காலத்திலும் வரவேற்பு பெறும் பேசுபொருளாக இருந்து வருகிறது.
குகை மனிதர்களாக கட்டுப்பாடுகளின்றி வாழ்ந்த மனிதனை நீரும், நெருப்பும், இரண்டின்தன்மையும் கொண்ட காதலும்தான் வரையறைக்குள் நிறுத்தியது.‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற வழக்கு இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்றதா இல்லையா என்ற வாதத்திற்குள் நாம் போக வேண்டாம். ஆனால், ‘இந்த நபர் என்னுடையவர், இவரோடுதான் என்னால் இப்படி நெருங்கிப் பழக முடியும்’ என்று ஓர் ஒழுங்குமுறை வந்தபிறகே மனம் ஒருமுகப்பட்டது. அதன்பிறகே, மனிதன் பெரும் சாதனைகளை நிகழ்த்தினான் என்பதை மறுக்கவே முடியாது. காதலிக்க ஆரம்பித்துவிட்டால், நன்றாக உடுத்துவது, முன்னேற்றம் பெற உழைப்பது, கனிவாக நடந்துகொள்வது என நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே நாகரீகம் கற்றுத் தந்த காதலுக்கு மீண்டுமொருமுறை பச்சைக்கொடி காட்டி அலசி ஆராய்ந்து பார்ப்போம்.
உடல் இயக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், ‘‘காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா… எல்லாம் ஹார்மோன் செய்யும் சேட்டைதானடா! ” என்றுதான் பாட்டாகப் பாட வேண்டும். மூளையின் நடுப்பகுதியில் சிறியதாக பாதம் வடிவத்தில் இருக்கிறது Hypothalamus எனும் ஹார்மோன் சுரப்பி. ‘Stress center ’ எனப்படும் இங்கேதான் ‘காதல் ஹார்மோன்’ Oxytocin சுரக்கிறது. தமிழில் இதனை ‘வாஞ்சை’ என்று சொல்லலாம். முத்தமிடும்போது ,கட்டிப்பிடிக்கும்போது ,நம்பிக்கையோடு பாதுகாப்பு உணர்வைப் பெறும்போது உள்ளே எழும் மனநிறைவு. இது இந்த வாஞ்சையின் நெருக்கம் (Intimacy ) இருக்கும் வரைதான் காதல் உயிர்ப்புடன் இருக்கும். இருவருக்கும் நல்ல உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
அதேபோல்,மகிழ்ச்சி / வெகுமதி (Reward) ஹார்மோன் எனப்படும் Dopomine ஹார்மோன் பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கும்போது உருவாகிறது. சுயமரியாதையோடு இலக்கை அடையும்போதும், ஒரு செயலை திறம்படச் செய்து முடிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு dopomine-தான் காரணம்.புதியவற்றை அறிந்துகொள்வதிலும், நினைவாற்றலை நிர்வகிப்பதிலும் டோப்பமைனின் பங்கு பெருமளவு இருக்கிறது. தொடர் ஊக்கம் அளிக்கும் என்பதாலேயே இது போதையானது எனலாம்.ஒருமுறை கிடைத்தால் மீண்டும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி, நம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கும்.
உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல இசை, இயற்கையோடு நேரம் செலவிடுதல், சமூக செயல்பாடுகள், கற்றல், யோகா /தியானம், நறுமணங்களை நுகர்வது, சூரிய வெளிச்சம் மற்றும் அந்யோன்யமான காதல் போன்ற நல்ல வழிகளில் டோப்பமைனைப் பெறலாம்.எண்ணற்ற தீய வழிகளிலும் டோப்பமைன் ஹார்மோன் சுரப்பைப் பெறலாம். போதைப் பொருட்கள் பயன்பாடு, அதிக அளவு Caffine, துரித உணவு பழக்கவழக்கங்கள், சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது, அதீத காம விழைவுகள்/ தேடல்கள் அவை சார்ந்தவற்றையே தேடிப்பார்ப்பது (Pornography), செயல்களைத் தள்ளிப்போட்டு (procrastination) சோம்பேறித்தனமாக இருப்பது, அதிகமாக உடற்பயிற்சி செய்வது, ஒரே விதமான வேலையில் மணிக்கணக்காக ஓய்வின்றி ஈடுபடுவது (Workaholic), தனக்கு ஆபத்து விளைவிக்கும்படி நடந்துகொள்வது (Self harming), அடுத்தவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது, ஆபத்துகளைப் புரிந்துகொள்ளாமல் அசட்டையாக சவால்களில் ஈடுபடுவது (Risk taking) இவையெல்லாம் தீமையான Dopomine sources என்று உணர்தல் அவசியம்.
நம் உடலில் இதுபோல் பல ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவையே அட்ரீனல் கார்டெக்ஸ் சோடியத்தையும், நீரையும் உடலில் தக்க வைத்துக் கொள்ளக்கூடியவை. சீரான ரத்த ஓட்டத்திற்கும் வழி வகுப்பவை. Stress – ஐ சமாளிக்கவும் இவை உதவுகின்றன. இந்த ஹார்மோன்களின் அளவுகள் மாறுபட்டால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு பல பின்விளைவுகள் தோன்றும். எனவே, ‘‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்பதுபோல் நல்லவழிகள் பல இருக்க, தீய வழியில்போய் மகிழ்ச்சி ஹார்மோன்களைப் பெற வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.
நான்கு மாதங்களுக்கு மேல் ஒருவர் மேல் ஈர்ப்பு இருந்தால் அதுவே காதல் என்கிறது அடிப்படை உளவியல். அப்படியென்றால், நண்பர்கள்,பொதுவான நபர்/ ஆளுமைகள் மீதெல்லாம் எனக்குப் பல காலமாக ஈர்ப்பு இருக்கிறதே..அதுவும் காதலா என்ற கேள்வி பிறக்கிறது இல்லையா? இதற்கான விளக்கத்தை கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் உளவியலாளர் லீ (Lee) ‘காதலின் நிறங்கள்’ என்று பட்டியலிட்டார்.
இதில் முதன்மையான காதல் வகைகள் Eros, Ludos, Storage ஆகிய மூன்று. Eros என்பது உடலும், மனமும் இணைந்த காதல். வழக்கமான திரைப்படங்களில், Fantacy கதைகளில், ஊடகங்களில் நாம் பலமுறை பார்த்து, கேட்டறிந்த காதல்தான் இது. முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கக் கூடியது. இறுதிவரை ஒன்றாகப் பயணிப்போம் என்று முடிவெடுக்கும் வழக்கமான ‘ரொமான்டிக்’ காதல். இரண்டாவது வகையான Ludos என்ற பெயரில் ‘Ludo’ எனும் விளையாட்டை அறிந்திருப்போம். ஆம். இதுவும் விளையாட்டுத்தனமான காதல்தான். இந்தக் காதலில் உண்மையான நெருக்கமோ, நீண்டகால உத்தரவாதமோ இருக்காது.
ஒரே நேரத்தில் பல காதல் எனும் பின் நவீனத்துவ காதல்கள் எல்லாம் இந்த வகையில் அடங்கும். Storage எனும் மூன்றாம் வகை காதல் இருவரும் அடிப்படை குணங்களை அறிந்துகொண்டு, சில காலம் பழகியபின், ஒத்த சிந்தனையினால் உருவாகும் வலுவான காதல் எனலாம்.Lee வரையறுத்த இரண்டாம் நிலை காதல் வகைகள் Pragma, Mania மற்றும் Agape ஆகியவை. Pragma – தற்காலத்தில் பிரபலமாக பலரும் புழங்கக்கூடிய காதல் வகை .
தர்க்கரீதியாக (Logical view) இவரோடு பழகினால் வாழ்க்கையில் நன்மை ஏற்படுமா / மகிழ்ச்சி கிடைக்குமா / இப்படி சாதக பாதகங்களை ஆராய்ந்து மூளையின் சொல்படி தனக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே இந்த வகை காதல். அடுத்தது Mania வகை காதல். பெயரே இதன் தன்மையைச் சொல்லிவிடும். ‘‘நீ காதலிக்காவிட்டால் இறந்து விடுவேன். உன்னை வேறொருவரோடு திருமணம் செய்யவிட மாட்டேன். கல்லைத் தூக்கி தலையில் போட்டு விடுவேன்” என்றெல்லாம் மிரட்டும் வெறித்தனமான காதல் இது. உளவியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தி இன்னொருவரைக் கட்டுப்படுத்த விரும்பும் தீவிரம் கொண்டது. (உதாரணத் திரைப்படங்கள்: குணா, சேது, ப்ரியமுடன், காதல் கொண்டேன்).
இரண்டாம் தொகுப்பில் மூன்றாவதாக இருப்பது Agape வகை காதல். இது ‘அன்பே சிவம்’ போல பொதுமைத்தன்மை கொண்டது. பிறர் மீது காட்டும் தன்னலமற்ற கருணையின் அடிப்படையிலானது. பொதுவான மனிதர்கள், மாற்றுத்திறனாளிகள், விலங்குகள் மீது எந்த எதிர்பார்ப்புகளுமின்றி அக்கறை செலுத்துவது இந்த வகையின் கீழ் வரும்.இந்த ஆறு வகை காதல்களில் நீங்கள் யாரிடம் எந்த வகையை வெளிப்படுத்தி வருகிறீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
காதல் எதுவென்று புரிந்துகொள்வதைப் போலவே எவையெல்லாம் காதல் இல்லை என்று புரிந்துகொள்வதும் இன்றைக்கு மிகத் தேவையான விழிப்புணர்வாகும். காம நெருக்கம் மட்டுமே காதல் இல்லை. 24x 7 இருவரும் கள நிலவரம் நேரலை போல update செய்துகொண்டே இருப்பதோ, பேசிக்கொண்டே இருப்பதோ காதல் இல்லை. ஊர் சுற்றுவதும் காதல் இல்லை.
எனில், எதுதான் உண்மைக்காதல்? 1.பொது இடங்கள் / உறவுமுறைகளோடு இருக்கும்போது உங்களின் பக்கமாக நிற்கும்.2.உங்களைப் புரிந்துகொள்ளும். குறைகளைத் தெரிந்துகொண்ட பிறகும் உங்களுடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யும். 4.நினைத்ததைச் செய்ய முடியாமல் போகும்போது உங்களை ஆறுதலாகத் தாங்கும். 5.உங்கள் முன்னேற்றத்திற்குத் தடை போடாமல் உதவும். 6. கவலை, கோபம் காரணமாக மனநிலை மாறும்போது அமைதிப்படுத்தும். 7. நல்லவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டாடும். இந்தத் தன்மைகளோடு உங்களிடம் பழகுபவர் யாரென்று பாருங்கள். அவரே உங்களுக்கான உண்மையான காதலன்/ காதலி.
உண்மைக்காதல் ஈகோ பார்க்காது. வெளிப்படையாக முழுமையான காதலைக் கொட்டும். உங்களை விட வேறொருவர் உயர்வானவர் என்று எண்ணும்படியான ஒரு தோற்றத்தை விளையாட்டுக்காககூட ஏற்படுத்த மாட்டார்கள்.பேசாமல் உள்ளே வைத்துக் கொண்டு ‘ இதயம்’ வெடிக்கும் காதல்,பார்க்காமலே காதல், தொலைபேசியில் காதல், தீவிரக் காதல், காதலுக்காக நாக்கை வெட்டிக்கொள்வது, காதலியின் காதலுக்கு துணை நிற்பது, பெற்றோருக்காக காதலை இழப்பது என தமிழ்த் திரைப்படங்களில் காதலைப் பல கோணங்களில் கசக்கிப் பிழிந்து காட்டியுள்ளனர் நம் இயக்குனர்கள். இத்தனை அறிவியல் விளக்கங்கள், கதைகள், காதல் படைப்புகளைக் கண்டபின்னும் இன்னும் இன்னதென்று புரியாமல் நாம் தவித்துக்கொண்டிருப்பதே காதலின் மாயத்தன்மை. காதலின் புதிரான தனித்துவம்.
பல ஆண்டுகள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருநாள் பிரிந்துவிடுகிறார்கள். அப்போது அத்தனை ஆண்டுகள் என்ன பேசினார்கள், என்னதான் புரிந்துகொண்டார்கள் என்ற யோசனை வருகிறது இல்லையா. ஆம் காதலிக்கும்போது மேகக்கூட்டங்களில் மிதப்பதுபோல் ஹார்மோன் சேட்டைகளால் சுயம் மறந்துவிடுவதே இதற்குக் காரணம். ‘Sweet Nothings ’ என்று செல்லப் பெயரிட்டு அர்த்தமற்ற அரட்டைகள் மட்டுமே செய்து நேரம் கடத்திய காதலில் என்ன புரிதல் ஏற்படும்.
எனவே, காதலிக்கும் பருவத்தில் வழக்கமான குழைவு, கொஞ்சல், மயக்கம் போன்ற உணர்வுகளைப் பரவசமாக அனுபவிக்கும் அதே நேரம் மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்க வேண்டும். நீண்ட காலம் உடன் வாழ வேண்டிய இணையிடம் பேச வேண்டிய பொதுவான பல கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். விருப்பு வெறுப்பு, எதிர்பார்ப்புகள், குடும்பச் சூழல்கள், மதம், அரசியல் சார்ந்த கொள்கைகள், நம்பிக்கைகள் என பலவற்றை தெளிவாகத் தெரிந்துகொண்ட பின் வரும் காதல் உறுதிமிக்கதாக இருக்கும்.
அப்போது, தன் வெற்றிக்கு மனைவி ஷாலினிக்கு மேடையில் நன்றி கூறிய நடிகர் அஜித்போல நடுத்தர வயதிலும் கடைகண்ணில் ஒளிரும் மதிப்புமிக்க காதல் கிடைக்கும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வெற்றியை நோக்கி நகர கைகோர்த்துச் செல்லும் நீண்ட அழகிய பயணமாக அப்போது காதல் மலர்ந்து விரியும்.
The post காதல் – ஹார்மோன்களின் விளையாட்டா? appeared first on Dinakaran.