
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் மஞ்சுளாவுக்கு இதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் கணவரை பிரிந்த அவர் தான் ஏற்கனவே காதலித்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த அனுமந்தப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். முதலில் இது இருவீட்டார் மற்றும் ஊர் பெரியவர்களுக்கு பிடிக்கவில்லை.
மஞ்சுளா, அனுமந்தப்பா தம்பதியை ஊர் பெரியவர்கள் கிராமத்தைவிட்டு ஒதுக்கி வைத்தனர். இதையடுத்து அவர்கள் எலபுர்கியில் வசித்து வந்தனர். கடந்த 8 ஆண்டுகளாக ஊர் மக்கள் அவர்களிடம் எந்த தொடர்பும் வைக்கவில்லை. இந்தநிலையில் அனுமந்தப்பாவின் குடும்பத்தினர் சமரசம் அடைந்து, தம்பதியை ஏற்று கொண்டனர். இதனால் அடிக்கடி அனுமந்தப்பா தனது தந்தை வீட்டுக்கு வந்து சென்றார்.
இந்தநிலையில் அனுமந்தப்பா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிலகமுகி கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்து வசித்தார். இது கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் உள்பட 16 பேருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மஞ்சுளா-அனுமந்தப்பா தம்பதியின் பெற்றோர்களையும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனர். சமீபத்தில் அனுமந்தப்பாவின் தந்தை வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் கிராம மக்கள் புறக்கணித்தனர்.
இதனால் மீண்டும் அவர்கள் எலபுர்கி கிராமத்துக்கு சென்று வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு தம்பதி மற்றும் அவரது குடும்பத்தினர் ஊர் பெரியவர்களின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை இந்த கிராமத்தில் உள்ள 80 குடும்பங்களில் 20 குடும்பங்களை இதேபோல ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.