காதல் ஜோடி ஆணவ படுகொலை காதலனின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

19 hours ago 2

கோவை: காதல்ஜோடி ஆணவ படுகொலை வழக்கில், கொலை செய்யப்பட்ட காதலனின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன்கள் வினோத்குமார் (27), கனகராஜ் (23). கூலித்தொழிலாளர்கள். இவர்களில், கனகராஜ், அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா (17) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் அண்ணன் வினோத்குமாருக்கு தெரியவந்தது. இதில், ஆத்திரம் அடைந்த அவர், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணின் காதலை கைவிடும்படி தம்பியை எச்சரித்து மிரட்டல் விடுத்தார். ஆனால், அவர் காதலை கைவிடவில்லை.

இந்நிலையில், கடந்த 2019 ஜூன் 25ம் தேதி காதல்ஜோடி தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வினோத்குமார், 2 பேரையும் சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்ஷினி பிரியா ஜூன் 29ம் தேதி உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை வழக்கு அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதையடுத்து வினோத்குமார் மேட்டுப்பாளையம் போலீசில் சரண் அடைந்தார். போலீசார், இந்திய தண்டனை சட்டம் 448, 302(2) ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வினோத்குமாரின் கூட்டாளிகள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரையும் மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கோவை எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ஆவணங்கள் பரிசீலனை, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், கடந்த 23ம் தேதி நீதிபதி விவேகானந்தன் அளித்த தீர்ப்பில், வினோத்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி எனவும், இவர் மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு கொடூரமான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வினோத்குமாருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து இரு தரப்பு வக்கீல்கள் விவாதம் நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு துவங்கிய இருதரப்பு விவாதம், மாலை 5.30 மணி வரை நீடித்தது. இதன்பின்னர், நீதிபதி விவேகானந்தன், இந்திய தண்டனை சட்டம் 448வது பிரிவின்கீழ் 1 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், 302(2) பிரிவின்கீழ் வினோத்குமாருக்கு சாகும்வரை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

* எந்த ரியாக்‌ஷனும் காட்டாத குற்றவாளி
நீதிபதியின் தீர்ப்பை கேட்டு, வினோத்குமார் எந்தவிதமான ரியாக்‌ஷனும் காட்டவில்லை. அவர், எப்போதும் போலவே காணப்பட்டார். நன்கு தாடி வளர்த்திருந்தார். உடன், அவரது வக்கீல்கள் சூழ்ந்து இருந்தனர். கோர்ட்டில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆவண சரிபார்ப்பு நடவடிக்கை முடிந்த பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

* வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
இந்த வழக்கில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி மோகன் தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த வழக்கில், 16 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். எதிர்தரப்பினர் 300 முறை வாய்தா வாங்கினர். ஆனாலும், சதி திட்டம் நிரூபிக்கப்பட்டு, இவ்வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதால், இது அரிதிலும் அரிதான வழக்காக பார்க்கப்பட்டது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என நீதிமன்றத்தில் வாதிட்டோம். குற்றவாளி இறுதிமூச்சு உள்ளவரை சிறையிலேயே இருக்கவேண்டும் எனவும் வாதிட்டோம். நாட்டில், இனியும் சாதிய வன்முறை நீடிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு, ஒரு முன்மாதிரியான தீர்ப்பாக அமைந்துள்ளது. இதற்காக, கடுமையாக உழைத்த இளம் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசாருக்கு நன்றி’ என்றார்.

* வேறு எந்த பெண்ணுக்கும் இந்த கொடூரம் நடக்கக்கூடாது
கொலை செய்யப்பட்ட வர்ஷினி பிரியாவின் தாயார் அமுதா கூறுகையில், ‘‘நான் மேட்டுப்பாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். இந்த வழக்கில், நீதிமன்றம் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனை மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில், எனது மகளுக்கு நேர்ந்த கொடுமை, இந்த சமுதாயத்தில் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இந்த தீர்ப்பு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது’’ என்றார்.

The post காதல் ஜோடி ஆணவ படுகொலை காதலனின் அண்ணனுக்கு தூக்கு தண்டனை: கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article