காதலை ஏற்க மறுத்த தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல் - நெல்லையில் பரபரப்பு

19 hours ago 1

நெல்லை,

நெல்லை மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. 38 வயதான இவர், அப்பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 24 வயது பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியைக்கும், ராஜூவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியையும் ராஜூவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 

அந்த பெண், தச்சநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாறுதலாகி, அங்கு பணியாற்றி வருகிறார். இதையடுத்து அந்த பெண், ராஜூவுடன் பேசுவதை குறைத்துள்ளார். இந்த சூழலில் ராஜூ, அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேச முயற்சி செய்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அந்த பெண் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ராஜூ, தானும் வீட்டிற்கு செல்வதாகவும், தன்னுடன் காரில் வருமாறும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, கட்டாயப்படுத்தி அவரை தனது காரில் ராஜூ அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது கார், வீட்டிற்கு செல்லாமல் கன்னியாகுமரியை நோக்கி சென்றது. இதனை அறிந்த அந்த பெண், வீட்டிற்கு செல்லாமல் என்னை எங்கே அழைத்துச் செல்கிறாய்? என ராஜூவிடம் கேள்வியெழுப்பினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெண்ணிடம் ராஜூ பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறப்படுகிறது.

ராஜூவின் பிடியில் இருந்து தப்பி வந்த அந்த பெண், நடந்தவை குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை கடத்துதல், பாலியல் சிண்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜூவை கைதுசெய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆசிரியையை ராஜூ ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் அவரை காரில் கடத்தியதும் தெரிய வந்தது. காதலை ஏற்க மறுத்த தனியார் பள்ளி ஆசிரியை கடத்தப்பட்ட சம்பவம் நெல்லை, தச்சநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Read Entire Article