காதலுக்கு எதிர்ப்பு; காதலரின் உறவுக்கார சிறுவனை கடத்திய நடிகை

3 months ago 20

வாலிவ்,

மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரிஜேஷ் சிங். இவரை நடிகை ஷப்ரீன் என்பவர் காதலித்து வந்துள்ளார். கிரைம் பேட்ரல் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகை ஷப்ரீன் நடித்து வருகிறார். இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதற்காக இரு வீட்டிலும் இவர்களுடைய திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், பிரிஜேஷின் மூன்றரை வயது உறவுக்கார சிறுவன் திடீரென காணாமல் போனதும் வீட்டில் பரபரப்பு தொற்றி கொண்டது. சிறுவனை எல்லா இடங்களிலும் தேடியும் கண்டறிய முடியவில்லை. இதுபற்றி வாலிவ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை ஷப்ரீன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனை உறுதி செய்த மூத்த காவல் அதிகாரி ஜெயராஜ் ராணாவானே கூறும்போது, பிரிஜேஷ் மீது ஷப்ரீன் அளவு கடந்த காதல் கொண்டிருக்கிறார். அதனால், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்கள் மற்றும் கிரைம் தொடர்களில் நடித்திருந்தபோதும், அவர் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் சில விசயங்களை செய்திருக்கிறார்.

சிறுவனை அவர் கடத்தி சென்றிருக்கிறார் என கூறியுள்ளார். பிரிஜேஷின் மருமகன் உறவுமுறையான பிரின்ஸ் என்ற அந்த சிறுவனை நேற்று காலை பள்ளிக்கு சென்று சந்தித்திருக்கிறார். பிரின்சுக்கும் ஷப்ரீனை முன்பே தெரியும். அதனால், ஷப்ரீன் அழைத்ததும் அவருடன் செல்ல தயாரானான். இந்நிலையில், மதியம் ஆகியும் சிறுவன் வீட்டுக்கு வரவில்லை. இதனால், சிறுவனின் குடும்பத்தினர் பள்ளியை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது, பெண் ஒருவர் வந்து பிரின்சை டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளார் என அவர்கள் தெரிவித்தனர். சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப்படையில் ஷபரீனை, பாந்திரா பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். சிறுவன் பிளாட் ஒன்றில், பாதுகாப்பாக இருந்துள்ளான். அவனை மீட்டனர்.

இந்த விவகாரத்தில், பிரிஜேஷின் தொடர்பு பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், அடையாளம் தெரியாத பெண்ணுடன் அவர் காணப்பட்டார். பிரிஜேசும், ஷப்ரீனும் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால், எவ்வளவோ முயன்றும் அவரை திருமணம் செய்து கொள்வதற்கான முயற்சியில் ஷப்ரீனால் வெற்றி பெற முடியவில்லை. அதனால், இந்த தீவிர முடிவை அவர் எடுத்துள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Read Entire Article