
லக்னோ,
உத்தர பிரதேசம் மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள கெடலேகு கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது வாலிபர். அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் நள்ளிரவு நேரத்தில் தனது காதலியின் வீட்டுக்குள் புகுந்து அவளை சந்திப்பதை அந்த வாலிபர் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவில் ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து தனது மகளை சந்தித்து செல்வது சிறுமியின் தந்தைக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வாலிபருக்கு தக்க தண்டனை கொடுக்க நினைத்தார். அதன்படி சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அந்த வாலிபர், தனது காதலியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்தார்.
அப்போது சமயம் பார்த்து வீட்டு வாசலில் காத்திருந்த சிறுமியின் தந்தை, வாலிபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தசம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், பக்கத்து மாவட்டமான அவுரையாவைச் சேர்ந்த லவ்குஷ், கெடலேகுவில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில், அவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் போது, "யாரோ" அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு, கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அனில் குமாரின் வீட்டின் அருகே லவ்குஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டனர்
வாலிபரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தந்தை அனில் குமாரிடம் இருந்து துப்பாக்கியை மீட்ட பின்னர், அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். தேவையான நடைமுறைகளை முடித்த பிறகு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தனர்.