புதுச்சேரி: காதலிப்பதாக இரண்டு சிறுமிகளை அழைத்துச்சென்று நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சிறுமிகளை மேலும் பலர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் புதுச்சேரி மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழக்கக்கோரியும் பொதுமக்கள் மாநில முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் விவேகானந்தன் கடந்தாண்டு காலாப்பட்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நடந்து ஒராண்டு ஆன நிலையில் மீண்டும் முத்தியால்பேட்டை சோலை நகரில் 2 பள்ளி மாணவிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 14 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி சிறுமி மற்றும் அவருடைய தோழி ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு பேரும் அங்கு இல்லாதததை கண்டு, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி இருவரையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து 2 சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
அதில் வைத்திக்குப்பத்தை சேர்ந்த புஷ்பராஜ் (எ) ராஜ் (25) ,மணி (எ) மணிமாறன் ஆகியோர் 2 சிறுமிகளையும் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி புதுவை கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துவிட்டு, அவர்களின் நண்பர்களை அழைத்து 2 சிறுமிகளையும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முத்தியால்பேட்டை போலீசார், போக்சோவில் வழக்குபதிந்து புஷ்பராஜ், மணி ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.
இவர்களில் மணி ஏசி மெக்கானிக்காகவும் புஷ்பராஜ் மீன் வியாபாரியாகவும் உள்ளனர். இன்னும் திருமணமாகவில்லை. தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 சிறுமிகளை மேலும் பலர் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post காதலிப்பதாக அழைத்துச்சென்று 2 பள்ளி மாணவிகள் கூட்டு பலாத்காரம்: பலருக்கு விருந்தாக்கிய கொடுமை appeared first on Dinakaran.