
திருவனந்தரபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (வயது 23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டதாக அபான் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார். மேலும், தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், அவர் கூறிய இடங்களுக்கு விரைந்து சென்றனர். அங்கு 5 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். படுகாயங்களுடன் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். அந்த பெண்ணை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருமலை பகுதியை சேர்ந்தவர் ரஹிம். இவரது மனைவி ஷெமி. இந்த தம்பதியின் மூத்த மகன் அபான் (வயது 23), இளைய மகன் அப்சான் (வயது 13). ரஹிம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அபான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரபு நாட்டிற்கு சென்று தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தார். ஆனால், கொரோனாவுக்குபின் அபான் கேரளா திரும்பிவிட்டார். ரஹிம் மட்டும் அரபு நாட்டில் தொழில் செய்து வந்தார்.

அபானின் பாட்டி சல்மாபீவி (வயது 88). இவர் பாங்கோட்டில் வசித்து வந்தார். அதேபோல், அபானின் சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதா. இவர்கள் இருவரும் சுள்ளாளத் பகுதியில் வசித்து வந்தனர். அபானின் காதலி பசானா. இவர் கல்லூரி படித்து வந்தார்.
இதனிடையே, அபானின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அபான் தனியாக தொழில் தொடங்கவும் நினைத்துள்ளார். மேலும், அபான் தனது காதலி பசானாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனால் குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், தொழில் தொடங்கவும் அபான் தனது பாட்டி சல்மாபீவி, சித்தப்பா லத்தீப் இடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காதலிக்கு வீடு வாங்கி கொடுத்ததற்கும் அபானின் தாயார் உள்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, தொழில் தொடங்க உறவினர்கள் பணம் தராதது ஆத்திமடைந்த அபான் புதிதாக வாங்கிய சுத்தியலை எடுத்துக்கொண்டு நேற்று மாலை பைக்கில் பாங்கோட்டில் உள்ள பாட்டி சல்மாபீவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த பாட்டி சல்மாபீவியை சுத்தியலால் அடித்த அபான் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதிலும் ஆத்திரம் அடங்காத அபான் பைக்கில் சுள்ளாளத் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாவையும் சுத்தியலால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர், காதலி பசானாவின் வீட்டிற்கு சென்ற அபான் அவரை பைக்கில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆத்திரம் அடங்காத அபான் தனது வீட்டில் இருந்த தாயார் ஷெமி, தம்பி அப்சானை சுத்தியலால் தாக்கியுள்ளார். பின்னர், மாடியில் உள்ள அறைக்கு சென்ற அபான் அங்கு இருந்த தனது காதலி பசானாவையும் சுத்தியலால் தாக்கினார். இந்த கொடூர தாக்குதலலில் அப்சான், பசானா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். தாயார் ஷெமி படுகாயமடைந்து மயங்கியுள்ளார். அவரும் உயிரிழந்துவிட்டதாக நினைத்த அபான் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளார். பின்னர், அபான் தானும் தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த அவர் ஆட்டோவில் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
தற்போது, அபான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அபானின் தாயார் ஷெமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேவேளை, பாட்டி, சித்தி, சித்தப்பா, தம்பி, காதலி என 5 பேரை அபான் சுத்தியலால் அடித்துக்கொலை செய்துள்ளார். விஷம் குடித்த அபானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அபான் 5 பேரையும் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது முழுமையான விசாரணையில் தெரியவரும். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.