
திருப்பதி,
திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் விழாவின் 8-ம் நாளான இன்று காலையில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேர் இழுத்தனர். பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தனர்.
மங்கல வாத்தியங்கள் முழங்க நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மங்கல வாத்தியங்கள் முழங்க, பஜனை குழுக்கள், வாகன சேவையின் மகத்துவத்தை புகழ்ந்து பாடியபடி சென்றனர். தேரோட்டத்தின்போது பக்தர்கள் பகவானைப் புகழ்ந்து, பஜனை பாடல்களை பாடினர்.
தேரில் எழுந்தருளிய பகவானை தரிசனம் செய்பவர்கள் பிறவி துன்பத்தில் இருந்து விடுபட்டு முக்தி அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு இறைவன் தரிசனம் அளிப்பார்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாள் நிகழ்வுகள் நாளை நடைபெறுகின்றன. நாளை காலை சக்கரஸ்நானம் சிறப்பாகக் கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக, காலை 9 மணி முதல் 10 மணி வரை சடங்கு மற்றும் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறும். பின்னர், காலை 10 மணிக்கு, கோவிலுக்கு எதிரே உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு சக்கரஸ்நானம் செய்யப்படும்.