சென்னை,
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர், 'மவுனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டர்போ' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் கவுதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமாகும் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல் புதுமுக இயக்குனரான டீனோ டென்னிஸ் இயக்கத்தில் 'பசூக்கா' என்ற படத்திலும் மம்முட்டி நடித்துள்ளார்.
இந்த படத்தில் காயத்ரி ஐயர் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மிதுன் முகந்தன் இசையமைத்துள்ளார். மேலும், நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியை பசூக்கா குறிவைத்துள்ளது. மம்முட்டியின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.