உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. சுமார் 49 கிமீ தூரத்துக்கு மலைப்பாதை, குகைகள், அடர் வனப்பகுதியை கடந்து இந்த காண்டூர் கால்வாய் வருகிறது. திருமூர்த்தி அணை அருகே காண்டூர் கால்வாயின் எதிர்பகுதிக்கு பராமரிப்பு பணிக்காக செல்வதற்காக பொதுப்பணித்துறையினர், கால்வாயின் குறுக்கே சிறு நடைபாலம் அமைத்துள்ளனர். ஆனால் சுற்றுலா பயணிகள் இந்த நடைபாலத்தில் சென்று, காண்டூர் கால்வாயின் நடுப்பகுதியில் நின்று இயற்கை காட்சிகளை ரசிப்பதுடன், செல்பியும் எடுக்கின்றனர். அப்போது, குழந்தைகளையும் அழைத்து செல்கின்றனர்.
காண்டூர் கால்வாயில் சுமார் 800 கனஅடி நீர் செல்கிறது. சில சமயங்களில் 1000 கனஅடி நீரும் செல்வதுண்டு. அப்போது, தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். சுமார் 10 அடி ஆழத்துக்கு கால்வாயில் தண்ணீர் செல்லும். காண்டூர் கால்வாயில் தவறி விழுந்தால் உயிர் பிழைப்பது கடினம். அந்த அளவுக்கு தண்ணீரின் வேகம் இருக்கும். கால்வாயில் தவறி விழும் யானை, காட்டுமாடு, காட்டுப்பன்றி, மான்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டு அணையில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.இந்நிலையில், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கால்வாயின் மேல்நின்று செல்பி எடுக்கின்றனர். குழந்தைகள் சற்று இடறினாலும் விபரீதம் நிகழ்ந்துவிடும். பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் பெரிய அளவில் இடைவெளியுடன் உள்ளன.
எனவே, பொதுப்பணித்துறையினர் இதை கண்காணித்து தடுக்க வேண்டும். நடைபாதை அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். தற்போது, கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். விபரீதம் நிகழும் முன் பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காண்டூர் கால்வாயில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்: விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.