சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், சென்னை காவல் ஆணையாளர் அருண், உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படும். உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள், மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள். 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் விபரங்கள் பெறப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.
The post காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16000 போலீசார் சிறப்பு பாதுகாப்பு: சென்னை காவல்துறை தகவல் appeared first on Dinakaran.