வேலூர்: காட்பாடி விளையாட்டு மைதானத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்பு தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் மாவட்ட பிரிவு சார்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சி வரும் ஜூன் 8ம்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கு என தனித்தனியே நடத்தப்படுகிறது. முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாளான 7ம்தேதி தவிர்த்து நேற்று (1ம் தேதி) முதல் 13ம்தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாளான 21ம்தேதி தவிர்த்து ஏப்ரல் 15ம்தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது.
3ம் கட்ட பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாளான மே 5ம் தேதி தவிர்த்து ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 11ம் தேதி வரை நடக்கிறது. 4ம் கட்ட பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாளான மே 19ம் தேதி தவிர்த்து மே 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. 5ம் கட்ட பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாளான ஜூன் 2ம் தேதி தவிர்த்து மே 27ம் தேதி தொடங்கி ஜூன் 8ம் தேதி வரை நடக்கிறது. இப்பயிற்சி முகாமானது காலை 6-7, 7-8, 8-9 மணி மற்றும் மாலை 4-5, 5-6, 6-7 மணி வரை சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்படுகிறது.
நீச்சல் பயிற்சி முகாமின் அம்சங்களாக, நீச்சல் தெரியாதவர்களுக்கான நீச்சல் பயிற்சி, நீச்சல் தெரிந்தவர்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி என தனித்தனியே பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கட்டணமாக சரக்கு மற்றும் சேவை வரியுடன் ரூ.1770 ஆகும். முதற்கட்ட பயிற்சியில் 50 பேர் கலந்து கொண்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post காட்பாடி விளையாட்டு மைதானத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்பு தொடங்கியது appeared first on Dinakaran.