
மும்பை,
சிவசேனா கட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் ராஜ் தாக்கரே. அப்போது முதல் ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர். இரு தரப்பினரிடையே 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மோதல் நீடித்து வந்தது.
இந்தச் சூழலில் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின்படி, மராட்டியத்தில் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் முடிவை திரும்ப பெற்றது. இது தொடர்பான வெற்றி பேரணி . மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது.
இதில்தான், ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய முதல் பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது:-
இந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்தி பேசாத மாநிலங்கள் முன்னோக்கி செல்கின்றன. ஆனாலும் அவர்கள் நாம் இந்தி கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். நான் இந்திக்கு எதிரானவன் அல்ல. ஆனால் பிராந்திய மொழியை அழித்து இந்தியை ஏன் திணிக்கிறீர்கள்?. எனது மகன் கான்வென்ட் பள்ளியில் படிப்பதாக கூறுகிறார்கள். பல அரசியல் தலைவர்கள், தென்னிந்திய சினிமா பிரபலங்கள் ஆங்கிலப்பள்ளிகளில் படித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் தமிழ், தெலுங்கு மொழியை பெருமையாக கருதுகிறார்கள்.
சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே ஆங்கிலப்பள்ளியில் படித்தார். ஆங்கில பத்திரிகையில் வேலை பார்த்தார். ஆனால் அவர் மராத்தியின் நிலையில் எந்த சமரசமும் செய்து கொண்டது இல்லை. பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கான்வென்ட் பள்ளியில் படித்தார். அவரது இந்துத்வாவை நீங்கள் கேள்வி எழுப்புவீர்களா?.
பால்தாக்கரே மற்றும் பல தலைவர்களால் என்னையும், உத்தவ் தாக்கரேவையும் இணைத்து வைக்க முடியவில்லை. ஆனால் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எங்களை சேர்த்து வைத்துவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.