காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

2 hours ago 3

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் நடைபெற்றது.

கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, நீல நிற பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ, மகிழம்பூ, மனோரஞ்சிதம் பூ, செண்பகப்பூ உள்ளிட்ட மலர் மாலைகள், வைர வைடூரிய திருவாபரணங்கள் அணிவித்து அதிகாலை 3 மணி அளவில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

அதிகாலை நான்கு மணியளவில் வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயணம் மற்றும் பஜனை கோஷ்டியினர் பாடிவர, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் ஆழ்வார் பிரகாரத்தில் சுற்றி வந்து நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், ராமானுஜர் மற்றும் ஆழ்வார்கள் சன்னதியில் சேவை சாதித்து விட்டு ஐந்து மணியளவில் கோபுர வாசலில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார் .

பின்னர் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு சேவை சாதித்த பெருமாள், நண்பகல் ஒரு மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார். தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Read Entire Article