காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது வார்டு பகுதியில் மளிகைச்செட்டி தெரு, பெருமாள் தெரு, பெரிய காஞ்சிபுரம் தர்கா உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 15 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. இந்த தெருக்கள் வழியாக ரயில் நிலையம் செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் தெருக்களில் வாகனங்கள் வேகமாக செல்லும்போது கழிவுநீர், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது படுவதால் முகம் சுளிக்கின்றனர். தெருக்களில் ஆறுபோல் ஓடும் கழிவுநீரால் குழந்தைகள் மற்றும் முதியோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தெருக்களில் ஆறுபோல் ஓடும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது வார்டில் உள்ள தெருக்களில் ஆறாக ஓடும் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.