மதுரை: தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின்பேரில், கோயில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களுக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது. இதனால் கோயிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது. எனவே 2023ல் கோயிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.
தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு நாள்தோறும் இப்பணிகளை செய்தால் மட்டுமே ஏப். 7ம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்பாக சீரமைப்பு பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குடமுழுக்கு நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கோயில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன் குடமுழுக்கு நடத்துவது சரியல்ல. எனவே, குடமுழுக்கு நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. கோயில் பணிகள் குறித்து சென்னை ஐஐடி குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆகியோர் ஆய்வு நடத்தி ஏப். 21ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு தடை appeared first on Dinakaran.