காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 16 பேர் பலி

3 months ago 14

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காசாமுனையின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த பள்ளியில் போரால் வீடுகளை இழந்த மக்கள் முகாமிட்டு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், நுசய்ரத் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 32 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article