காசாவில் நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிப்பு; இது தொடக்கம் மட்டுமே - நெதன்யாகு அறிவிப்பு

3 hours ago 2

காசா,

காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படாத சூழலில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நேற்று 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

ஒருபுறம் சிறை பிடிக்கப்பட்ட பணய கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி நடந்தபோதும், மறுபுறம் காசாவில் தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, பாலஸ்தீனியர்களுக்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான விநியோகத்திற்கும் இஸ்ரேல் தடை விதித்து உள்ளது. இதனால், 20 லட்சம் பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 2-வது கட்டத்திற்கு இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுக்க போவதில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கிழக்கு காசா பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படியும் இஸ்ரேல் உத்தரவிட்டது.

இந்நிலையில், நெதன்யாகு அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் இனி ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அதிகரிக்கப்பட்ட ராணுவ பலத்துடன் செயல்படும்.

ஹமாஸ் அமைப்பை அழிப்பது மற்றும் பயங்கரவாத குழுவால் சிறை பிடித்து வைக்கப்பட்டு உள்ள அனைத்து பணய கைதிகளையும் விடுவிப்பது என போரின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் வரை இஸ்ரேல் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சூழலில், ரமலான் புனித மாதத்தில் போரானது மீண்டும் முழு அளவில் நடைபெற கூடும் என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள 59 பணய கைதிகளின் நிலை நிச்சயமற்ற சூழலில் உள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரில் தென்பட்ட நபர்களையெல்லாம், அந்த அமைப்பு துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கு மேலாக நடந்த மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது.

முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்படி, காசாவில் இருந்து மீதமுள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்படும். இதனுடன், இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்படுவதுடன், நீண்டகால அமைதிக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் விருப்பம் தெரிவித்து அதனை வலியுறுத்தி வருகிறது. இது நடைபெறாத சூழலில், காசாவுக்கான நிவாரண பொருட்களை நிறுத்தி உள்ளது. இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது.

Read Entire Article