
நெல்லை,
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). இவர் தமிழ்நாடு காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். கடந்த 2009-ம் ஆண்டு சென்னையில் பணியாற்றிய போது விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின்னர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
நேற்று அதிகாலையில் ஜாகீர்உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்றார். தொழுகையை முடித்துவிட்டு அங்குள்ள தெற்கு மவுண்ட்ரோடு வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜாகீர் உசேன் பிஜிலியை சரமாரியாக வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த கொலை தொடர்பாக நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் டவுன் தொட்டிபாலம் தெருவை சேர்ந்த மகபூப்ஜான் மகன் அக்பர்ஷா (32), பால்கட்டளை பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் கார்த்திக் (32) ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்களை டவுன் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்கு பின்னரே கொலைக்காக முழு காரணமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை வழங்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, துப்பாக்கிசூடு நடத்தி பிடிக்கப்பட்டுள்ளார். ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை சுற்றி வளைத்துப் பிடிக்கும்போது, போலீசாரை அவர் அரிவாளால் வெட்டினார். அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி முகமது தெளபிக்கை கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.