காசாவின் முக்கிய பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற்ற இஸ்ரேல்

3 months ago 9

டெல் அவிவ்:

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு தரப்பும் பணயக் கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது. இதுவரை 5 முறை பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. அதேபோல் காசாவில் நடந்த உக்கிரமான சண்டை காரணமாக இடம்பெயப்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

வடக்கு காசாவைவும், தெற்கு காசாவையும் பிரிக்கும் முக்கிய பகுதியாக நெட்சாரிம் பகுதி உள்ளது. போரின்போது அதை ராணுவ மண்டலமாக இஸ்ரேல் அறிவித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் தொடக்கத்தில், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு காசாவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக பாலஸ்தீனியர்களை நெட்சாரிமைக் கடந்து செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்தது.

இந்நிலையில், நெட்சாரிம் பாதையில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை இன்று திரும்ப பெற்றுள்ளது. அங்கிருந்து காசா முனையின் கிழக்கு எல்லையில் இஸ்ரேல் உருவாக்கிய ராணுவ மண்டலத்திற்கு படைகள் திரும்பியுள்ளன. இதனால் தெற்கில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் படையினரின் எந்தவித சோதனையும் இன்றி அனுமதிக்கப்படுகின்றனர்.

42 நாட்கள் நீடிக்கும் வகையிலான போர்நிறுத்தம் பாதியை கடந்துவிட்டது. இன்னும் ஹமாஸ் பிடியில் பல இஸ்ரேலிய பணயக்கைதிகள் உள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காக போர்நிறுத்தத்தை நீட்டிக்கவேண்டியது அவசியம். இது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் ஒப்பந்தம் நீட்டிப்புக்கான எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

Read Entire Article