
பெங்களூரு,
எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் இங்கிடி உள்ளிட்டோர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் இணைந்தனர்.
இதனையடுத்து கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக பெங்களூரு அணியினர் சின்னசாமி மைதானம் சென்றடைந்தனர். ஆனால் அங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாத வகையில் மழை கொளுத்தியது. இதனால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது.
ஆனால் கொளுத்தும் மழையை பொருட்படுத்தாத டிம் டேவிட் மழையில் நனைந்தபடி மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் டைவ் அடித்து விளையாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.