காசா மீதான தாக்குதலில் 400 பேர் பலி: இஸ்ரேலின் செயலுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

2 days ago 2

புதுடெல்லி,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காசா மீது இஸ்ரேல் சரமாரியாக வான்தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

இஸ்ரேலிய அரசாங்கத்தால் 130 குழந்தைகள் உள்பட 400 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு மனிதநேயம் இல்லை என்பதை காட்டுகிறது. இது போன்ற செயல்கள் அவர்களின் உள்ளார்ந்த பலவீனத்தையும், உண்மையை எதிர்கொள்ள முடியாத இயலாமையையும் பிரதிபலிக்கின்றன. மேற்கத்திய சக்திகள் இதை அங்கீகரித்தாலும் சரி, பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலையில் தங்கள் கூட்டுறவை ஒப்புக் கொண்டாலும் அல்லது ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி, மனசாட்சி உள்ள உலகின் அனைத்து குடிமக்களும் (பல இஸ்ரேலியர்கள் உட்பட) இதைப் பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிட கூடாது. இஸ்ரேல் அரசு எந்த அளவுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்களைக் கோழைகளாக வெளிப்படுத்துகிறார்கள். மறுபுறம், பாலஸ்தீன மக்களின் துணிச்சல் மேலோங்குகிறது. அவர்கள் கற்பனை செய்ய முடியாத துன்பங்களைத் தாங்கிக் கொண்டாலும், அவர்களின் உள்ளம் நெகிழ்ச்சியுடனும், அசைக்க முடியாததாகவும் உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article