
மும்பை,
54 வயது கணவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது என்று அவரது மனைவியின் கோரிக்கையை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்தது. சத்தாராவை சேர்ந்த ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பெண் ஒருவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த 17 நாளில் அந்த பெண், கணவரை பிரிந்து சென்றார். மேலும் அக்டோபர் மாதம் அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது கணவருக்கு ஆண்மை குறைவு இருப்பதால் தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். மேலும் தனது கணவருக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் புனே சசூன் மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர்கள் பெண்ணின் கணவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர். அதன் அறிக்கையை சத்தாரா மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் பெண்ணின் கணவர் பாலியல் உறவு கொள்ள தகுதியில்லாதவர் என கூறமுடியாது என கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை மீது திருப்தி அடையாத பெண், கணவருக்கு ஆண்மை சோதனை அடங்கிய முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 2024 பிப்ரவரியில் கோர்ட்டு பெண்ணின் கணவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியது.
இதை எதிர்த்து பெண்ணின் கணவர் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின் போது பெண்ணின் கணவர் தரப்பில் ஆஜரான வக்கீல், " மனுதாரருக்கு சசூன் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. எனவே மீண்டும் சோதனை நடத்த தேவையில்லை. மனுதாரருக்கு தற்போது 54 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்" என்றார்.
இதேபோல பெண்ணின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாம்தார் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், "திருமணத்தின் போது கணவருக்கு 47 வயதும், பெண்ணுக்கு 40 வயதும் ஆகியிருந்தது. தற்போது அவர்களுக்கு முறையே 54, 47 வயதாகிறது. வயதாகும் போது பாலியல் நடவடிக்கைகள், பாலியல் ஆர்வம் குறைவது நன்றாக தெரிந்தது தான். எனவே இந்த வழக்கில் திருமணத்துக்கு பிறகு 8 ஆண்டுகளை கடந்து மீண்டும் ஒரு மருத்துவ சோதனைக்கு உத்தரவிடுவது பயனற்றது" என்று தெரிவித்துள்ளார். கோர்ட்டு வழங்கிய வினோத தீர்ப்பால் கணவர் தரப்பில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.