காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அதிரடி மாற்றம் எதிரொலி தமிழக காங்கிரஸ் தலைவரும் மாற்றம்?கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

3 months ago 9

சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த அஜோய் குமார் திடீரென மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளராக கிரிஸ் ஜோடன்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலிட பொறுப்பாளர் மாற்றம் எதிரொலியாக தமிழக காங்கிரஸ் தலைவரும் மாற்றப்படலாம் என்ற தகவல் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் இப்போது முதலே தேர்தல் பணியை தீவிரப்படுத்த தொடங்கியது. அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த டெல்லி தலைமை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. அதன்படி, நகரம் முதல் கிராமம் வரை பூத் கமிட்டிகளை அமைப்பது, கிராமம் வாரியாக கட்சிகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக காங்கிரசில் முக்கிய நிர்வாகிகளை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகாய், கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார். அதற்கான மாநிலங்களில் பெயர்களில் தமிழ்நாடு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவர் கூறிய தகவலை தொடர்ந்து முதல்கட்டமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த அஜோய் குமார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. அவருக்கு பதிலாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளாராக கிரிஸ் ஜோடன்கரை தமிழ்நாடு- புதுச்சேரி மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் தமிழக காங்கிரஸ் தலைமையிலும் மாற்றம் இருக்கக் கூடும் என்றும் டெல்லி காங்கிரசார் மத்தியில் பேசப்படுவதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் சிலர் காய் நகர்த்தி வருவதாகவும் காங்கிரசார் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. அதேநேரம், தலைவர் மாற்றத்துக்கான பேச்சு என்பதே டெல்லி தலைமையில் பேசப்படவே இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் மற்றொரு தரப்பினர் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். இந்த விவாதங்களால் தமிழக காங்கிரசில் மீண்டும் பரபரப்பு எகிறி வருவது குறிப்பிடத்தக்கது.

* பதவி பறிப்பால் விரக்தியில் திரும்பிய பொறுப்பாளர்

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த அஜோய் குமார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் நேற்றும், இன்றும் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சுற்றுப்பயணம் செய்து கிராம கமிட்டி கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை காங்கிரசார் வரவேற்ற நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து, தனது சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு ஓட்டலில் தங்கி விட்டு நேற்று காலை விரக்தியுடன் டெல்லி புறப்பட்டு சென்றார்.

 

The post காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அதிரடி மாற்றம் எதிரொலி தமிழக காங்கிரஸ் தலைவரும் மாற்றம்?கட்சி வட்டாரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article