புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியால் அவர்களது வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது எளிது, ஆனால் அவற்றை முறையாகச் செயல்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சாரத்தின்போதும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியால் அவர்களது வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களான இமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் நிதி நிலை மிகவும் மோசமாகி வருகிறது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இது அந்த மாநில மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
இத்தகைய அரசியலால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளின் பலன்கள் மறுக்கப்படுவது மட்டுமின்றி, தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்ளும் முடக்கப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதி கலாசாரத்திற்கு எதிராக நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரியானா மக்கள் பொய்களை நிராகரித்து, நிலையான, முன்னேற்றம் சார்ந்த மற்றும் செயல்திறன் கொண்ட அரசாங்கத்தை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பதை சமீபத்தில் பார்த்தோம்.
காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தப்படும் வாக்கு என்பது ஆட்சியின்மை, மோசமான பொருளாதாரம் மற்றும் கொள்ளைக்கான வாக்கு என்று இந்தியா முழுவதும் மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்திய மக்கள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள்.
கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி உள்கட்சி அரசியலில் மும்முரமாக உள்ளது. வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டாமல் கொள்ளையடிக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போதுள்ள திட்டங்களையும் திரும்பப் பெறப் போகிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தெலுங்கானாவில் விவசாயிகள் தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர்.
முன்னதாக, சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சில சலுகைகளை உறுதியளித்தது. ஆனால் அவை ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தப்படவே இல்லை. காங்கிரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.