![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39090312-dsghg.webp)
கொல்கத்தா,
நாட்டின் 13வது குடியரசு தலைவராக கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. இவர் கடந்த 2020 ஆகஸ்ட் 31ம் தேதி தனது 84வது வயதில் காலமானார். இதனிடையே, பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி. இவர் 2012ம் ஆண்டு மேற்குவங்காளத்தின் ஜங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி எம்.பி.யாக வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு அபிஜித் முகர்ஜி வெற்றிபெற்றார்.
அதேவேளை, கடந்த 2021 ஜுலை மாதம் காங்கிரசில் இருந்து விலகிய அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குபின் அபிஜித் முகர்ஜி தற்போது மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய அபிஜித் முகர்ஜி 4 ஆண்டுகளுக்குபின் இன்று மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் முன்னிலையில் அபிஜித் காங்கிரசில் இணைந்துள்ளார். இது குறித்து அபிஜித் கூறுகையில், காங்கிரஸ் கட்சியிலும், அரசியலிலும் இன்று எனக்கு இரண்டாவது பிறந்தநாள்' என்றார்.