வாஷிம்: காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல்கள் இயக்குகின்றன என பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசி உள்ளார். மகாராஷ்டிராவுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிரா சென்றார். அங்கு வாஷிம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஆங்கிலேய ஆட்சியை போல் காங்கிரசும் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை சமமாக கருதவில்லை. இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.
அதனால்தான் இந்தியாவின் கலாச்சார, பாரம்பரியத்தை வளப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ள பஞ்சாரா சமூகத்திடம் காங்கிரஸ் எப்போதும் இழிவான அணுகுமுறையை கொண்டுள்ளது. இந்தியா மீது நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். சுயநலத்துக்காக ஏழைகளை கொள்ளையடித்த காங்கிரஸ், அனைவரும் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறது. மக்களை பிளவுப்படுத்த மட்டுமே தெரிந்த காங்கிரஸ் நகர்ப்புற நக்சல் கும்பல்களால் இயக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் விழிப்புடன், ஒன்றுபட்டு இருந்தால் காங்கிரசை முறியடிக்க முடியும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும், பாசன திட்டங்களையும் ஊழலுக்காக பயன்படுத்தின” என்று இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
The post காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு appeared first on Dinakaran.