கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு ஜாமீன்: மாலை அணிவித்து வரவேற்ற இந்து அமைப்புகள்

2 hours ago 2

பெங்களூரு,

பெண் பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் 2017ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இரவு, பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே துப்பாக்கி குண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து கவுரி லங்கேஷ் படுகொலையில் இந்துத்துவா குழுக்களுக்குத் தொடர்பிருப்பது விசாரணைகளில் தெரியவந்தது. கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தையும் கடந்த ஆண்டு கர்நாடகா அரசு அமைத்திருந்தது.

இந்த நிலையில் கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கில் கொலையாளிகள் அடுத்தடுத்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 9-ந் தேதியன்று கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இருந்து மேலும் பலர் ஜாமீனில் விடுதலையாகினர்.

இதனிடையே சிறையில் இருந்து விடுதலையாகி விஜயபுரா வந்த கவுரி லங்கேஷ் கொலையாளிகள் 2 பேருக்கு காவி சால்வை போர்த்தி இந்து அமைப்பினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர். பின்னர் கொலையாளிகள் 2 பேரும் சிவாஜி சிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாலை அணிவிக்கச் செய்தனர். மேலும் கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். 6 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையான கவுரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு இந்து அமைப்பினர் அளித்த இந்த வரவேற்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் 18 பேருக்கு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், இப்போது 16 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article