
பர்மிங்காம்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி ஆகும். இதற்கு முன்னர் இங்கு 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி கண்ட இந்திய அணிக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, என்ன ஒரு வெற்றி. எட்ஜ்பாஸ்டனில் (பர்மிங்காம்) 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரட்டை சதங்களுடன் முன்னணியில் இருந்து வழிநடத்திய கேப்டன் சுப்மான் கில்லுக்கும், 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப்புக்கும் சிறப்பு பாராட்டுகள். இது வெறும் வெற்றி அல்ல - இது சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம், மன உறுதி மற்றும் தரத்தின் வெளிப்பாடு. பெருமையுடனும் நம்பிக்கையுடனும் லார்ட்ஸுக்கு முன்னேறுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.