கவர்னர் விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையீடு

3 hours ago 2

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் சென்னைப்பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்தது.

இந்த சூழலில் யு.ஜி.சி தலைவரையும் சேர்த்து தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினார். தமிழக அரசு கடந்த டிச.9ம் தேதி மற்றும் டிச.13ம் தேதி யு.ஜி.சி தலைவரை விடுத்து பிற மூன்று உறுப்பினர்களை கொண்டு தேடுதல் குழுவை அமைத்து அரசாணையை வெளியிட்டது. ஆனால் அந்த அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் யு.ஜி.சி தலைவரை இணைத்து துணைவேந்தர் தேடுதல் குழு அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அந்த மனுவில், "கவர்னரின் உத்தரவு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சாசன விதிகள்படி நடைமுறை உரிமை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் சாசன விதிகளுக்கு முரணாகவும் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் கவர்னர் அதிகாரம் விவகாரத்தில் மேற்கூறிய விவகாரங்களையும் சுப்ரீம்கோர்ட்டு கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காக தற்போது தாக்கல் செய்துள்ள கூடுதல் விவர மனுவையும் ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று அதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Read Entire Article