டெல் அவிவ்,
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் 1,200-க்கு மேற்பட்டோரை கொன்று குவித்த அவர்கள், 250 பேரை பணயக்கைதிகளாகவும் பிடித்து சென்றனர்.இதைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களுக்கு மேலாக காசா முழுவதையும் பீரங்கி குண்டுகள், ஏவுகணைகளால் நிர்மூலமாக்கிய இஸ்ரேல் 46 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பலி கொண்டது.
அதேநேரம் இந்த கொடூர போரை முடிவுக்கு கொண்டுவர கத்தார் உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இரு தரப்பினரிடமும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.நீண்ட காலமாக நடந்த இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் பயனாக காசாவில் போர் நிறுத்தம் செய்யவும், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்கவும் நேற்று முன்தினம் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை இஸ்ரேலும், ஹமாசும் ஏற்றுக்கொண்டன. ஆனால் கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது எகிப்துடனான காசா எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சர்ச்சை நிலவியது.
எனினும் கத்தார் பிரதமர் மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமரசம் செய்தார். இதனால் அந்த சர்ச்சைக்கும் தீர்வு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தம் கைெயழுத்தானது. இதை கத்தார் மற்றும் ஹமாஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். எனினும் இஸ்ரேல் தரப்பில் கருத்து தெரிவிக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் வழங்கினால்தான் இது அமலுக்கு வரும். இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வருகிற 19 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்தம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- "காசாவில் பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் காசா மக்களுக்கு பாதுகாப்பான, நிலைத்த மனிதாபிமான உதவிகள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தவும், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளது.