கவர்னர் மவுனமாக இருக்கலாமா..? சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

3 hours ago 1

புதுடெல்லி,

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, "மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா..? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

'நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை' என்று கவர்னர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்?" என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மேலும் மாநில அரசால் மீண்டும் அனுப்பப்படும் மசோதா மீது கவர்னர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும், மசோதாவை ஜனாதிபதிக்கு, கவர்னர் அனுப்பினால், அதன்மீது ஜனாதிபதி என்ன முடிவுகளை எடுக்கலாம்? என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.

அதற்கு தமிழக அரசு, மசோதாவை திருப்பி அனுப்பும் போது காரணத்தை கவர்னர் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தது. மறுபரிசீலனைக்கான காரணத்தை குறிப்பிடாதபோது அரசு எவ்வாறு பரிசீலிக்கும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய மசோதாவா என்பதை கவர்னர் ஆய்வுசெய்ய வேண்டும். கவர்னர் தனது சுய முடிவையோ, மத்திய அரசின் முடிவையோ எடுக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது என்றும், மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார் என்றும், கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவது கூட்டாட்சிக்கு முடிவுகட்டுவதாக அமையும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதங்களை முன்வைத்து வருகிறார். இறுதி விசாரணையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து விட்டதாக கூறப்படும்நிலையில், இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article