கவர்னர் உத்தரவுப்படி டெல்லி முதல்வர் இல்லத்தில் இருந்து அடிசி வெளியேற்றம்

1 month ago 7

புதுடெல்லி: டெல்லி சிவில் லைன்ஸ் சாலையில் டெல்லி முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. அந்த இல்லத்தில் தான் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் வசித்து வந்தார். தற்போது புதிய முதல்வர் அடிசி பதவி ஏற்றுள்ளதால், அவர் குடியேற வசதியாக கெஜ்ரிவால், சிவில் லைன்ஸ் சாலையில் தான் வசித்து வந்த முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை சமீபத்தில் காலி செய்தார்.

இந்த இல்லத்தில் முதல்வர் அடிசி கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடியேறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ‘இந்த இல்லத்தை பொதுப்பணித்துறை ஆய்வு செய்ய வேண்டும். அதுவரையில் அதை பூட்டி வைக்க வேண்டும். ரூ.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட இந்த இல்லத்தில் கெஜ்ரிவாலும், அடிசியும் சேர்ந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என்று பாஜ சட்டப்பேரவை தலைவர் விஜேந்தர் குப்தா கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவுப்படி சிவில் லைன்ஸ் சாலையில் உள்ள டெல்லி முதல்வர் இல்லம் தற்போது வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அங்கு இருந்த முதல்வர் அடிசியின் உடமைகள் மற்றும் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் உடமைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இந்த பங்களாவை பா.ஜ மூத்த தலைவருக்கு ஒதுக்க கவர்னர் மாளிகை முடிவு செய்துள்ளது என்று முதல்வர் அலுவலகம் குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு கவர்னர் மாளிகை பதில் அளிக்கவில்லை.

The post கவர்னர் உத்தரவுப்படி டெல்லி முதல்வர் இல்லத்தில் இருந்து அடிசி வெளியேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article