சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையை அரசியல் கட்சி செயலகமாக மாற்றி மலிவான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கவர்னர் பொறுப்பை ஏற்ற ஆரம்ப காலத்தில் இருந்து அவரது செயல்பாடு கடுமையான கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றது. சில நேரங்களில் சுப்ரீம் கோர்ட்டு கூட கவர்னர் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளது.
இன்று (16.11.2024) கவர்னர் மாளிகையில் நடைபெறும் திருவள்ளுவர் - கபீர் தாஸ், யோகி வேமனா - ஆகியோர் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி முதன்மை விருந்தினராக பங்கேற்கும் இந்த நிகழ்வின் அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள "வள்ளுவர்" படம் அச்சிடப்பட்டுள்ளது.
வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டின் தொன்மை மரபையும், தனித்துவ பண்பையும் அறியாத ஆர்.என்.ரவி, தனது மதவெறி சார்ந்த மலிவான அரசியல் அடையாளமாக வள்ளுவரை பயன்படுத்தும் முயற்சியை தமிழகம் ஒரு போதும் ஏற்காது. கவர்னரின் அநாகரிக செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.