திருவள்ளூர் / சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்தஇடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விபத்து குறித்து விசாரிக்க 6 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் - மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று முன்தினம் காலை10.30 மணிக்கு பாக்மதி விரைவு ரயில் புறப்பட்டது. ஜோலார் பேட்டை, அரக்கோணம், சென்னை - பெரம்பூர் வழியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இரவு 8.27 மணியளவில், கும்மிடிப்பூண்டி, கவரைப் பேட்டை ரயில் நிலையம் அருகே தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பிரதான தண்டவாள பாதையிலிருந்து விலகி, லூப்லைனில் சென்றது.இதனால், அந்த பாதையில் 3 நாட்களாக நின்று கொண்டிருந்த சரக்குரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.