கவரப்பேட்டை ரெயில் விபத்து: மேலும் 20 பேருக்கு சம்மன்

4 weeks ago 9

சென்னை,

சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த 11-ந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. மெயின் பாதையில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் பாதையில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்தது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.

இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர், சிக்னல் நிலை மேலாளர்கள் உட்பட 13 பிரிவுகளை சோ்ந்த 30 போிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தின், சென்னை கோட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் 15 பேரிடம் விசாரணை நடந்து முடிந்தது.

2-வது நாளாக எஞ்சிய 15 பேரிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2 நாட்கள் நடந்த இந்த விசாரணையில், பாகுமதி ரெயிலின் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், ரெயில் மேலாளர், சரக்கு ரெயிலின் ஓட்டுநர், ரெயில் மேலாளர், கவரப்பேட்டையில் பணியில் இருந்த நிலைய மேலாளர், இந்த மார்க்கத்தின் போக்குவரத்து ஆய்வாளர், மூத்த என்ஜினீயர், கேட்கீப்பர், விபத்துக்குள்ளான ரெயிலின் டிக்கெட் பரிசோதகர் உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ரெயில்வே மூத்த அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழு ஒன்று விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி கூட்டு அறிக்கை ஒன்றை நேற்று சமர்ப்பித்தது. அதில் மெயின் பாதையும், லூப் பாதையும் சந்திக்கும் இடத்தில் ரெயில் தடம் புரண்டிருக்கலாம் எனவும், அதன் மூலம் இந்த மோதல் நடந்திருக்கும் என்றும் ரெயில் விபத்தின் பின்னணியில் சதி இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ரெயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தண்டவாளத்தில் போல்டுகள் காணாமல் போனதாக கூறப்பட்ட விவகாரத்திலும், பொன்னேரி, கவரப்பேட்டை பகுதியில் இரும்பு திருடர்கள், காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்படுள்ளது.

Read Entire Article