சென்னை,
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒடிசா ரெயில் விபத்து போல், சிக்னல் கோளாறு காரணமாக கவரப்பேட்டையில் ரெயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்தன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ரெயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், கவரப்பேட்டை சிக்னல் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியது. இவர்கள் இன்று மாலை தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த சூழலில் கவரப்பேட்டையில் விபத்து நடந்த பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் புதிய தகவல்கள் கிடைத்தன. அதன்படி விபத்து நடந்த தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகள் மற்றும் பிராக்கெட்டுகள் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் பொன்னேரி ரெயில் நிலையத்திலும் தண்டவாளத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டிருந்தன. இதையடுத்து இந்த ரெயில் விபத்துக்கு பின்னணியில் சதி திட்டம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரெயில் விபத்து ஏற்பட்ட கவரப்பேட்டை மார்க்கத்தில் முடங்கியிருந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. ரெயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்து தற்போது ரெயில் சேவை தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ரெயிலாக டெல்லியில் இருந்து வரும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் சென்னை சென்டிரலுக்கு ஒரு வழித்தடத்தில் இயக்கப்பட்டது. மீதமுள்ள வழித்தடம் நாளை காலைக்குள் சீரமைக்கப்பட்டு ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.