தனிப்பட்ட ஜாதகங்களின் அடிப்படையில் ராசிபலன் அமைவதில்லை. கிரக நிலைகள் அன்றைக்கு எப்படி இருக்கின்றனவோ அதையும், ஒவ்வொரு ராசிக்கு அல்லது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு அந்த அமைப்பு எப்படி இருக்கிறது என்பதையும் வைத்துக்கொண்டு ராசிபலனைக் கணிக்கிறோம். அது பலருக்கும் பொதுப் பலனாகவே இருக்கும். ஜன்ம ஜாதக அமைப்பு மாறுபட்டாலோ, தசா புத்தி வேறுபாடாகவோ இருந்தால் இந்த ராசி பலன்கள் பலன் தருவதில்லை. பலன் தந்தாலும் மிகக் குறைந்த அளவே பலன் தரும். அதனால்தான் பலர் ராசிபலனில் போட்ட படி நடக்கவில்லையே என்கிறார்கள். ராசி பலனை வைத்து நமக்கு என்ன நடக்கும் என்பதை முடிவெடுப்பதைவிட, ஜாதகத்தை எடுத்துக் கொண்டு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதை ஒரு ஜோதிடரிடம் தெரிந்து கொள்வதுதான் சிறப்பானதாக இருக்கும்.கோச்சார நிலையை அடிப்படையாக வைத்துக் கொண்டு ராசி பலன்களைத் தீர்மானிப்பது போல, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளையும், கோள் சாரத்தில் உள்ள கிரக நிலைகளையும் இணைத்து பலன் காண்பது சிறப்பாக இருக்கும். இதற்கு “நாடி முறை’’ என்று பெயர்.
நாடி சாஸ்திரத்தில் பெரும்பாலும் லக்னம் ராசியை அடிப்படையாகக் கொள்ளாமல் ஜன்ம ஜாதக கிரக அமைப்புக்களையும், கோள் சார கிரக அமைப்புக்களையும் இணைத்துப் பார்த்து பலன் காண்பார்கள். உதாரணமாக, குரு போன்ற சுப கிரகங்கள் ராகு – கேது போன்ற இருள் கிரகங்களோடு சேருகின்ற பொழுது குருவால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போய்விடுகிறது. அதே குரு, சுப கிரகங்களோடு இணைகின்ற பொழுது அந்தப் பலன் கிடைத்து விடுகிறது. நாடியில் பல முறைகள் இருக்கின்றன. பிருகு நாடி, சந்திரநாடி என்றெல்லாம் வகைகள் உண்டு. நாடி ஜோதிடம் என்றால் வைத்தீஸ்வரன் கோயில் முதலிய இடங்களில் பல ரிஷிகளின் பெயர்களால், கட்டை விரலை வைத்துக்கொண்டு, ஏற்கனவே பனை ஓலையில் எழுதப்பட்ட ஜாதக பலன்களைப் படிப்பது என்று நினைத்து விடாதீர்கள்.
அதுவும் நாடிதான் என்றாலும், இங்கே சொல்ல வந்தது வேறு வகை ஜாதக கணிதங்களைப் பற்றி. பிருகு நந்தி நாடி என்று ஒரு வகை. எதிர்கால நிகழ்வுகளை கோசார கிரகங்கள் எதை நோக்கி நகர்கின்றன? ஜன்ம ஜாதகத்தில் உள்ள கோள் நிலைகளோடு நடப்பு கிரகங்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன என்பதை வைத்துக்கொண்டு துல்லியமானப் பலன்களை சொல்ல வைக்கிறது. என்ன வகையான தொழில் செய்யலாம்? உறவுகள் எப்படி இருக்கும்? ஆரோக்கியம் எப்படி இருக்கும்? போன்ற வழிகாட்டுதல்கள் இதில் கிடைக்கின்றன. ஒரு ஜாதகத்தின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை பகுப்பாய்வு செய்ய முடிகிறது. ராசி மற்றும் ராசி அடிப்படையில் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி பலன்கள் என்பது பல கோடி மக்களை உள்ளடக்கிய பொதுவான ஒரு பலன்.
ஆம், ஒவ்வொரு ராசியும் பல கோடி மக்களை உள்ளடக்கியது. நாடி ஜோதிட முறை கிரக பெயர்ச்சி பலன்கள், பிறப்பு ஜாதக அடிப்படையில் பலன்களை கொண்டது. நாடி பெயர்ச்சி பலன்கள் பொது தன்மை காட்டிலும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரே ராசியை சார்ந்த இரு நபர்கள் என்றாலும், இருவருக்கும் கிரக நிலைகள் மாறுபடும். ஒரே ராசி ஒரே மாதிரி கிரகங்கள் ஜாதகத்தில் அமைவு இராது. ஆனால், ராசி ஒன்றாக இருக்கும். பொதுவான ராசி பலனில் இவர்கள் இருவருக்கும் பலன் ஒன்றாக சொல்லப்படுகிறது. ஆனால் நாடி முறையில் ஒரே ராசியாக இருந்தாலும் இருவருக்கும் பலன் மாறுபடும். ஜெனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் கோட்சார பெயர்ச்சி கிரகங்களின் பார்வையைப் பெறும் பொழுது, கிரகம் குறிப்பிடும் அகம் புறம் காரகங்கள் உயிர் பெறும்.ஜெனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் சுபக் கிரகப் பார்வை பெற்றால் சிறப்பான பலன்களும், அசுப கிரக பார்வை பெற்றால் தீய பலன்களையும் எதிர்பார்க்கலாம்.உதாரணமாக, இப்பொழுது ரிஷபத்தில் இருந்து குரு, மிதுன ராசிக்கு மாறப் போகின்றார். ஜன்ம ஜாதகத்தில் எந்த ராசியாக இருந்தாலும், அவர்களுக்கு குரு மிதுனத்தில் இருந்தாலும், தனுசு ராசியில் இருந்தாலும், கும்ப ராசியில் இருந்தாலும் குருவின் பார்வையைப் பெறுவார். அப்பொழுது குருவின் காரகத்துவங்கள் பலன் தர ஆரம்பிக்கும்.
உதாரணமாக, திருமணத்திற்காக காத்திருப்பவராக இருந்தால் அவருக்கு, தனுசு, கும்பத்தில் குரு இருந்தால் குரு பார்வையால் சுபகாரியங்கள் நடக்கும். மிதுனத்தில் குரு இருந்தால், ஜன்ம குருவின் மீது கோசார குரு செல்வதாலும் குருவின் காரகத்துவ பலன்களான திருமணம் நடைபெறும். திருமணம் நடைபெற்று குழந்தை பேற்றுக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைத்தல் என பல சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.கிரகச் சேர்க்கையும், கோள் சாரத்தையும் விதி, மதி என்பார்கள். கிரகச் சேர்க்கை என்பது விதி. அது மாறாது. ஆனால் அதோடு கோள் சாரம் இணையும் பொழுது அந்த விதிக்கான காரியங்கள் நடக்க ஆரம்பித்து விடும். அது சுப காரியமாக இருந்தாலும் அசுப காரியமாக இருந்தாலும் நடக்கும்.பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரகங்களை கோட்சார பெயர்ச்சி கிரகங்கள் பார்வை செய்யும் பொழுது, ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் காரகங்கள் உயிர் பெறும். எந்த ஒரு கிரகமும் தனித்து இயங்காது. ஒரு ராசியில் உள்ள கிரகம், தான் அமர்ந்த ராசியிலிருந்து எண்ணி வரும் 1, 5, 9 ஆம் ராசிகளில் உள்ள கிரகங்களுடன் சேர்க்கை பெற்றே பலன் தரும்.
1, 5, 9 என்பது திரிகோணம். ஒரு குறிப்பிட்ட காரக கிரகத்தின் முதன்மை சேர்க்கை பலன்கள் ஆகும்.
1. மேஷம், சிம்மம், தனுசு (கிழக்கு, நெருப்பு)
2. ரிஷபம், கன்னி, மகரம் (தெற்கு, நிலம்)
3. மிதுனம், துலாம், கும்பம் (மேற்கு,காற்று)
4. கடகம், விருச்சிகம், மீனம் (வடக்கு, நீர்)
இதைக் கவனித்தால் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம்.ஒரு ராசிக்கு நேர் எதிர் ராசி (7ம் ராசி) அந்த ராசியின் செயல்பாட்டை சமனம் இருக்கும். (balancing and copunter) உதாரணமாக, நெருப்பு ராசி, காற்று ராசியோடு இணைந்து செயல்படும். நெருப்புக்கு காற்று அவசியம் அல்லவா. அதைப் போல நீர் ராசி, நில ராசியில் இணைந்து செயல்படும். நெருப்பு ராசிகள் கிழக்கு ராசிகளாகவும், காற்று ராசிகள் அதன் நேர் எதிர் திசையான மேற்கு ராசிகளாக இருப்பதையும், நில ராசிகள் தெற்கு ராசிகளாகவும், நீர் ராசிகள் அதன் நேர் எதிர் திசையான வடக்கு ராசியாக இருப்பதையும் கவனித்தால் ஜோதிட சாஸ்திரம் இயற்கையான விதிகளோடு இணைந்து இருப்பதைக் கவனிக்க முடியும்.
The post நாடி தரும் யோகம் appeared first on Dinakaran.