காலம்! யாருக்கும் எதற்கும் கட்டுப் படாதது. அதே சமயம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் காலம்தான். சூரிய இயக்கமும், சந்திர இயக்கமும் காலத்தை அனுசரித்தேதான் நடைபெறுகின்றன. பனித்துளிகள் விழுவதும் பனிப்படலம் பரவுவதும் கோள்களின் இயக்கமும், காலம் நடத்தும் திருவிளையாடல் காட்சிகளே! அந்தக் காலம், அவ்வப்போது அனுபவசாலிகளான உத்தமர்களை அவதரிக்கச் செய்து, நல்வாழ்வு வாழ மானிட இனத்திற்கு வழி காட்டுகிறது.
அந்த வகையில், 19-ம் நூற்றாண்டு மிகவும் உயர்ந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், வடலூர் வள்ளலார் எனும் ராமலிங்க சுவாமிகள் எனும் மூன்று உத்தமர்களைத் தந்தது, 19-ம் நூற்றாண்டே! இந்த மும்மூர்த்திகளில் ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தவிர, மற்ற இருவரும் தோன்றியதும் சித்தியடைந்ததும், நம் தமிழ் நாட்டில்தான். (வள்ளலாரைப் பற்றி மக்கள் மத்தியில் நன்றாகவே பரவி இருக்கிறது) மற்றொருவரான கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளைப் பற்றிய தகவல்கள், சிலவற்றைப் பார்க்கலாம் வாருங்கள்!
47-ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்தவர். நாள்தோறும் ஒரு லட்சம் வில்வ இலை களைச்சாற்றி, ஒரு லட்சம் பஞ்சாட்சரம் சொல்லிச் சிவபூஜை செய்தவர். அதன் காரணமாகச் ‘சுந்தர சிவனார்’ என்று அழைக்கப் பட்டவர். இல்லறவாசியாக இருந்து, ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவயார் போலத் தெய்வீக வாழ்க்கை நடத்தியவர், கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள். கிரிவலம், திருத்தல யாத்திரை என்பதைப் போல, நதி வலம் என்பதைச் செய்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். (ஒரு நதி தொடங்கும் இடத்தில் இருந்து, அது ஓடும் இடமெல்லாம் வலம் வந்து அந்நதி கடலில் கடக்கும் முகத்துவாரம் வரை வலம் செய்வது, ‘நதி வலம்’ எனப்படும்) அம் முறைப்படித் தாமிரபரணியில் பாண தீர்த்தத்தில் தொடங்கி, நதி வலம் வந்தவர் இவர்.
ஸ்ரீ அப்பைய தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்தவர். செல்லும் இடமெல்லாம் சிவ நாம மகிமை சொல்லி பஜனை செய்து, சூத சம்ஹிதை எனும் ஞான நூலைப் பல முறைகள் சொற்பொழிவு செய்து மக்களிடையே பரப்பியவர். லட்ச தீபத் திருவிழாவைத் தொடங்கி, அதைப் பல முறைகள் செயல் படுத்தியவர். பிரும்ம கீதை எனும் மாபெரும் ஞானநூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர். அன்னதானம் செய்வதிலும், ஆலயக் கும்பாபிஷேகம் செய்வதிலும், ஈடு இணையின்றி விளங்கி, 22-ஆலயங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்தவர், ஸ்ரீ கோடக நல்லூர் சுந்தரசுவாமிகள்.
இந்த மகான் செய்தவைகளைக் குறிப்புக்களாக எழுதினால்கூட, அதுவே தனி நூலாக ஆகிவிடும். சுவாமிகள் என்ற பொதுப் பெயரிலேயே, இவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் சிலவற்றைப் பார்க்கலாம்! 1831-ம் ஆண்டு, டிசம்பர் 3 (கார்த்திகை 20) சனிக்கிழமை அன்று, அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர், கோடக நல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள். யக்ஞேசுவர சாஸ்திரிகள், காமாட்சி அம்மாள் தம்பதிகளின் தவப்பயனால், இரண்டாவது மகனாக அவதரித்தார், சுவாமிகள். திருநெல்வேலியில் உள்ள கங்கைகொண்டான் என்ற திருத்தலத்தில் அவதரித்த சுவாமிகள், பதினெட்டு மாதக் குழந்தையாக இருக்கும்போது, பெற்றோர்களை இழந்தார்.
ஆதரவு இல்லாமல் இருந்த குழந்தைகள் இருவரையும் அவர்களின் தாய்மாமன், பத்தமடைக்கு அழைத்துச் சென்று வளர்க்கத் தொடங்கினார். ஏழாவது வயதில் சுவாமிகளுக்கு ‘பிரம்ம உபதேசம்’ எனும் மந்திர உபதேசம் நடந்தது. வேதங்கள், சிவபஜனை என ஆர்வமாக இருந்த சுவாமிகள், விளையாட்டுகளில் மற்ற சிறுவர்களை விஞ்சி நின்றார். ஸ்ரீ கிருஷ்ண கனபாடிகள், வீரவநல்லூர் சோமசுந்தர சாஸ்திரிகள் ஆகியோரிடம் வேதம், உபநிடதம், வடமொழி இலக்கிய – இலக்கண, தர்க்க நூல்களை எல்லாம் கற்றார் சுவாமிகள்.
இவ்வளவு ஞான நூல்களைக் கற்றும் ஆர்வம் அடங்காதவரைப் போல, ‘சூத சங்கிதை’ எனும் சூட்சுமமான ஞான நூலையும் ஆழ்ந்து கற்றார் சுவாமிகள். நாள்தோறும் சிவ பூஜையும் ஒரு லட்சம் பஞ்சாட்சர ஜபமும் செய்துவந்த சுவாமிகள், அதன் காரணமாக ‘சுந்தர சிவனார்’ என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு ஞானக்கல்வியும் நல் ஒழுக்கமும் நிறைந்த சுவாமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார் மாமா. திருநெல்வேலியில் உள்ள ‘அச்சாணி’ என்ற ஊரிலிருந்த ராமசுப்பையர் என்பவரின் மகளான ஜானகி என்பவரை சுவாமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். மாமனார் என்பவர் மாப்பிள்ளைக்கு என்னென்னமோ கொடுப்பார்.சுவாமிகளுக்கு அவர் மாமனார், பாணலிங்கம், நடராஜர், சிவகாமி, ஆகிய
விக்கிரகங்களை அளித்தார்.
கூடவே சிவபூஜை செய்யும் முறையையும் உபதேசித்தார். இப்படிப்பட்ட மந்திர உபதேசம் முதலானவை கிடைத்தால், சற்றுகூட அலட்சியமாக இருக்கக்கூடாது. அது பின் விளைவுகள் பலவற்றை உண்டாக்கிவிடும். இது தெரிந்த சுவாமிகள், நாள்தோறும் ஒரு லட்சம் ‘நமசிவாய’ மந்திரம் சொல்லி, ஒரு லட்சம் வில்வ இலைகளால் முறைப்படிச் சிவபூஜை செய்தார்.இரவில் ஆலயம் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தார். அதே சமயம், சுவாமிகளின் மனைவி அவரிடம், ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரிடம் அன்னை சாரதாதேவி நடந்து கொண்டதைப் போலவே (சுவாமிகளின் மனைவி அவரிடம்) நடந்து கொண்டார்.
மந்திர உபதேசம், சூத சங்கிதையைப் பல இடங்களிலும் விரிவுரை செய்வது என, ஆத்மார்த்தமான வாழ்க்கை வாழ்ந்து வந்த சுவாமிகள், தாமிரபரணியில் பாணதீர்த்தத்தில் தொடங்கித் திருச்செந்தூர் வரை (முன் சொன்ன) ‘நதிவல யாத்திரை’ செய்யத் தொடங்கினார். செல்லுமிடம் எல்லாம் சிவ பஜனையும் – சூத சங்கிதை விரிவுரையும் செய்து வந்தார். நதிவல யாத்திரை முடிந்து, திருத்தல யாத்திரையைத் தொடர்ந்தார் சுவாமிகள். மதுரை, திருவானைக்கோவில், திருவையாறு, மாயூரம், சீகாழி, சிதம்பரம், வேதாரண்யம், விருத்தாசலம் ஆகிய திருத் தலங்களைத் தரிசித்த சுவாமிகள், காசியை அடைந்தார். காசியில் அப்போது, பெரும் யோகியான மகாகணபதி சுவாமிகள் என்பவர் இருந்தார்.
அவர் ஆறு மாதங்கள் கங்கை நீருக்குள்ளேயே இருக்கும் பெரும் யோகி.காசிக்குப் போன சுவாமிகள், அந்த மகாகணபதி சுவாமிகளைத் தரிசிப்பதற்காகத் தானும் கங்கை நீருக்குள் சென்று, அந்த சுவாமிகளைத் தரிசித்தார். அற்புதமான இந்தச் சந்திப்பு நடந்ததை நினைவு படுத்தும் விதமாக, காசியில், மணிகர்ணிகா கட்டத்தில் அந்த இரு மகான்களின் திருவுருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளதை இன்றும் காணலாம்.
காசியில் இருந்து சுவாமிகள் திரும்பியதும், அவருடைய குரு ‘அச்சாணி’யில் சமாதி அடைந்த தகவல் கிடைத்தது. அங்கு போய்க் குருநாதரின் சமாதியைத் தரிசித்துத் திரும்பிய சுவாமிகள், அதன்பின் சிலகாலம் மௌனத்தைக் கடைப் பிடித்தார். அப்போது கோடக நல்லூரில் இருந்த அடியார்களில் சிலர், சுவாமிகளிடம் வந்து, ‘‘நல்லவர்கள், அதுவும் உங்களைப் போன்ற தர்மம் அறிந்தவர்கள், பேசாமல் மௌனமாக இருப்பது, பெரும் தீங்கை உண்டாக்கும். ஆகையால் நீங்கள் தயவுசெய்து மௌனத்தைக் கலைத்து, சூத சங்கிதையை விரிவாகச் சொல்ல வேண்டும்’’ என வேண்டினார்கள். சுவாமிகள் ஒப்புக் கொண்டார்.
கோடக நல்லூரில், `பஞ்சாங்க’ முறைப்படி, அதாவது ஐந்து நாட்களில் சூத சங்கிதையை விரிவாகச் சொல்லி உரையாற்றினார். அதை முடித்த சுவாமிகள், அருகில் உள்ள சுத்தமல்லி என்ற கிராமத்திற்குச் சென்றார். அங்கு கடையம் சேஷாசல தீட்சிதர் என்பவர் சூத சங்கிதை மூல நூலைப் படிக்க, சுவாமிகள் விளக்கம் சொல்லி வந்தார். அப்போது சுவாமிகளின் மனதில் ஓர் அழைப்பு கேட்டது; ‘‘சுந்தரா! நீ வித்வத் சந்நியாசம் கொள்!’’ என்றது அது. அதை உணர்ந்த சுவாமிகள், அப்போதே `வித்வத் சந்நியாசம்’ ஏற்றார்.
உபதேசம் கேட்பது, அதை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பது, பயிற்சி செய்வது, சமாதி நிலை அடைவது முதலியவைகளால் ஞானம் பெற்றவர் பெறும் துறவே வித்வத் சந்நியாசம். இருபத்து மூன்றாம் வயதில் சுவாமிகள், திருநெல்வேலியில் உள்ள சங்கர மடத்தில் வசிக்கத் தொடங்கினார். அப்போது சுவாமிகளின் ஆன்மிகப் பயிற்சிகளுக்குத் தனிமையான இடம் தேவைப்பட்டது.
அதனால் சுவாமிகள் கோடகநல்லூரில் ஆற்றங்கரையில் இருந்த மூங்கில் புதர்களை நாடிச்சென்றார். அங்கு சுவாமிகள் மேல்நிலையை அடைந்து யோகியானதால், ‘கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள்’ என அன்று முதல் அழைக்கப்பட்டார். திருநெல்வேலி சங்கர மடத்தில் சூத சங்கிதை விரிவுரையும் செய்து வந்தார் சுவாமிகள். அவ்வப்போது அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்று சூத சங்கிதை விரிவுரை செய்துவந்தார் சுவாமிகள். ஒரு சமயம், மாலை நேரத்தில் நெல்லை காந்திமதி அம்மன் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வரும்போது, அங்கு ஏராளமான தீபங்கள் ஏற்றப்பட்டு, அந்த இடமே ஔி மயமாக இருந்தது.
அதைக் கண்ட சுவாமிகள் ஓர் அன்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி, லட்ச தீப விழா நடத்தத் தீர்மானித்தார். 1864-ம் ஆண்டு, தை அமாவாசையை முன்னிட்டுப் பதினோரு நாட்கள் காந்திமதியம்மன் ஆலயத்தில் மிகவும் விரிவாக மகாருத்ர அபிஷேகம், வேத பாராயணம், புராணச் சொற்பொழிவுகள், சூதசங்கிதை விரிவுரை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. அப்போதுதான் முதல் முறையாகக் காந்திமதியம்மன் ஆலயத்தில் `லட்ச தீபத் திருவிழா’ நடந்தது.
நல்வழியையும் ஞானத்தையும் பரப்புவதற்காகவே அவதரித்த சுவாமிகளின் வரலாறு மிகவும் விரிவானது. நாம் பார்த்தது, ஒரு சில மட்டுமே! 1878-ம் ஆண்டு, ஐப்பசி ஆறாம் நாள்-திங்கட்கிழமை-தேய்பிறை தசமி அன்று அரிமளம் எனும் திருத்தலத்தில் சுவாமிகள் சமாதி அடைந்தார். அரிமளத்தில் ஓர் அதிஷ்டானம் நிறுவப்பெற்றது. இன்றும் அதைத் தரிசிக்கலாம்.
குருவருளும் திருவருளும் பெறலாம்!
-பி.என்.பராசுராமன்
The post வாழ்வில் எல்லையில்லா ஆனந்தம் அருளும் சுந்தரசுவாமிகள் appeared first on Dinakaran.