கழிவு குப்பைகளை ஏரியில் கொட்ட வந்த டிராக்டர்களை கிராம மக்கள் சிறைபிடித்து வாக்குவாதம் செய்யாறு அருகே பரபரப்பு

3 weeks ago 4

செய்யாறு, அக். 25: செய்யாறு அடுத்த வட எலப்பாக்கம் கிராம ஏரியில் நேற்று காலை 10 மணி அளவில் கழிவு குப்பைகளை டிராக்டர்களில் ஏற்றி வந்து கொட்டியுள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் குப்பைகளை கொட்ட வந்த 6 டிராக்டர்களை சிறை பிடித்து டிராக்டர் ஓட்டுனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்த கழிவு குப்பைகள் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டியதாக டிராக்டர் டிரைவர்கள் தெரிவித்தனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த செய்யாறு போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை திரும்ப எடுத்து செல்வதாகவும், கொட்ட வந்த டிராக்டர்களை திரும்ப அனுப்புவதாகவும் உறுதியளித்தும் அதனை கேட்க மறுத்த கிராம மக்கள் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து குப்பைகளை அள்ள ஏற்பாடு செய்தால்தான் குப்பை கொட்டிய வாகனங்களை விடுவிப்போம் என தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கொட்டிய குப்பைகள் முழுவதும் திரும்ப அள்ளுவதற்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின்பு கிராம மக்கள் குப்பை கொட்டிய 6 டிராக்டர்களை விடுவித்தனர். கழிவு குப்பைகளை ஏற்றி வந்து ஏரியில் கொட்ட வந்த டிராக்டர்களை சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கழிவு குப்பைகளை ஏரியில் கொட்ட வந்த டிராக்டர்களை கிராம மக்கள் சிறைபிடித்து வாக்குவாதம் செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article