
டெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய எல்லையில் நிறுவப்பட்டுள்ள உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை தடுப்பு அமைப்பு, ரஷிய ஏவுகணை தடுப்பு அமைப்பு (எஸ் 400) போன்றவை மூலம் பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆகாஷ் ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்கிய விஞ்ஞானி பிரஹல்தா ராமாராவ் , இது மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறியுள்ளார்.
பிரஹல்தா ராமாராவ் (வயது 78) டிஆர்டிஓ துறையில் ஆகாஷ் ஏவுகணை உருவாக்க அமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். இவரை முன்னாள் ஜனாதிபதியான ஏபிஜே அப்துல்கலாம், இந்த துறைக்கு தேர்ந்தெடுத்திருந்தார்.
ஆகாஷ் ஏவுகணை தடுப்பு அமைப்பு குறித்து பிரஹல்தா கூறுகையில்,
எனது வாழ்வில் மகிழ்ச்சியான நாள். எனது குழந்தை (ஆகாஷ் ஏவுகணை அமைப்பு) மிகவும் துல்லியமாக செயல்பட்டு எதிரி நாட்டு டிரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி வருகிறது. எதிர்பார்த்ததையும் கடந்து ஆகாஷ் ஏவுகணை சிறப்பாக செயல்படுவதை பார்க்கும்போது எனது கண்களில் கண்ணீர் வருகிறது' என்றார்.