
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், மதுரையை அடுத்த கள்ளழகர் கோவிலில் நேற்று மாலையில் சித்திரை திருவிழா தொடங்கியது.
மேளதாளம் முழங்க பரிவாரங்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். அங்கு நூபுர கங்கை தீர்த்தத்தால் அழகருக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.
இன்று(வெள்ளிக்கிழமை) மாலையும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நாளை(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி. மதுரை நோக்கி புறப்படுகிறார். கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நேரிக்கம்பு ஏந்தி வர இருக்கிறார். கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்பட வழிநெடுகிலும் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருள்கிறார்.
வைகை ஆற்றில்..
நாளை மறுநாள் புதூர் மூன்று மாவடியில் அழகரை மதுரை பக்தர்கள் பெருந்திரளாக கூடி ஆடிப்பாடி எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து 12-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.45 மணிக்கு மேல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள்.
13-ந் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பாடும், கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்தலும், இரவில் ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார காட்சியும் நடக்கிறது.
14-ந் தேதி இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். 15-ந் தேதி கள்ளழகர் மதுரையில் இருந்து அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். அன்றிரவு அப்பன் திருப்பதியில் தரிசனம் அளிக்கிறார். 16-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.
494 மண்டகப்படிகளில்
இந்த விழாவில் அழகர் கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை 36 கி.மீ. தூரம் வரும் அழகர், 494 மண்டகப்படிகளில் எழுந்தருள இருக்கிறார். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக மதுரைக்கு 39 உண்டியல்கள் கொண்டு வரப்படுகின்றன.
அழகரின் தங்கக்குதிரை, சேஷ, கருட வாகனங்கள் அழகர் கோவிலில் இருந்து நேற்று மதுரைக்கு டிராக்டர்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
மதுரை தல்லாகுளத்தில் தங்கக்குதிரை வாகனம் இறக்கி வைக்கப்பட்டது. கருட வாகனம் தேனூர் மண்டபத்திலும், சேஷ வாகனம் வண்டியூர் கோவிலிலும் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.