மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

8 hours ago 1

கொழும்பு,

இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.

இதில் 4 போட்டிகளில் 3 வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அடுத்து இலங்கை 2 வெற்றிகளுடன் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தனது முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அன்னெரி டெர்க்சன் 104 ரன்கள் விளாசினார். இலங்கை தரப்பில் மனுடி நாணயக்காரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 316 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 42.5 ஓவர்களில் 239 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் சமாரி அத்தபத்து 52 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிளோ ட்ரையன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

Read Entire Article