
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் வருகிற 24-ந்தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அழகர் மலை உச்சியில் உள்ள வற்றாத நீரூற்றான நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்வார்கள்.
ஆடி அமாவாசையில் தீர்த்தமாடினால் அத்தனை பாக்கியமும் தேடி வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெறும். இதற்காக நூபுரகங்கை தீர்த்த தொட்டி அடிவாரத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக மரத்தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதுதவிர அன்று இரவு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலில் சந்தனம் சாத்துப்படியும், பின்னர் கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.