
சென்னை,
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அந்த வகையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வந்தனர்.
இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 39,145 பேர் பங்கேற்கவுள்ளனர். முதல் சுற்றில் பங்கேற்கும் மாணவர்கள் ஜூலை 16க்குள் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 17ல் தற்காலிக ஒதுக்கீடு ஆணை தரப்பட்டு, ஜூலை 18ல் மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும். இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஜூலை 23ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ல் நிறைவு பெறுகிறது.